Thursday, 18 April 2024

*ஆள்காட்டி விரல் அடையட்டும் பெருமை..*

 


மீனைக் கவ்வும்
கொக்கு போல் 
காத்து கிடக்குது 
ஓர் கூட்டம்..

ஆழ யோசித்து
ஆழக் குழியில் தள்ள
காத்து கிடக்குது
ஓர் ஆணவக் கூட்டம்..

தந்திரங்களில்
வஞ்சனை செய்ய
காத்து கிடக்குது
நரிகள் கூட்டம்..

உழைக்கும் வர்க்கமே...
ஓடாய் தேய்ந்தது போதும்
புதுமை படைக்கும்
இளைய சமூகமே
நாகரிக மோகத்தில்
குனிந்து கிடந்தது போதும் ..

பலியாடுகளாய் 
முந்தைய ஆட்களின்
மந்தை ஆடுகளாய் 
இதுவரை
இருந்தது போதும்..

மான மில்லாமல் 
மாற்ற மில்லாமல்
நாற்றம் வீசிய
ஆண்டாண்டாய்
மண்டியிட்டட
மாண்புமிகு மந்திரிகளை
தூக்கியெறியும்
மகத்தான எந்திரமே
உன் கைவிரல்....

இன்றாவது
உனக்குள் இருக்கும் 
நெற்றிக்கண் திறக்கட்டும்
அருகதையுள்ள
அரசியல் பண்பாளனை
தேர்ந்தெடுக்கட்டும்
உரிமைக்குரல் ஓங்க
நிலம் செழிக்க
உன் ஆள்காட்டி விரல்
அடையட்டும்
வாக்களித்த பெருமிதம் ...
*** ***

ஆண்டவனாய் மாறிடு.. இன்றொரு நாள்



👆வாய்ப்பளித்து வாழ்வளிக்கும்

ஆண்டவனாய் ஆணையிடட்டும் 

நீ செலுத்தும் வாக்கு..


👆கையேட்டில் எழுதாதவன்

கைநாட்டால் அள்ளி

அடகு வைத்தவனுக்கு ஆப்பு

நீ செலுத்தும் வாக்கு..


👆தலைமை சரியில்லா

தலைவனையும்

தவிடு திண்ண வைக்கும்

நீ செலுத்தும் வாக்கு..


👆உச்சி முதல் கால்வரை

புரையோடிய ஊழல்புற்றை

தாங்கும் ஊழல்வாதியை

ஓர்விரலால் ஒழிக்கும்

நீ செலுத்தும் வாக்கு..


👆மாற்றம் வேண்டுமென

மன்றாடும் மனிதா

உன்னிலிருந்து தொடங்க 

இன்றோர் வாய்ப்பு 

ஓட்டெனும் சவுக்கடியால்

பாடம்புகட்டு...👍👆

(வரிசையில் நேரம் வீணாக்காமல் படித்துவிடு.. சரியென நினைத்தால். . பகிர்ந்திடு.. ஆனால் வாக்களிக்கும்போது மறவாதே😃)

Sunday, 14 April 2024

*சித்திரைப் பெண்ணே முத்திரை..*


நித்திரையில் இருந்து

சித்திரையில் எழுந்து 

சிரிக்கும் புன்னகையே 

உன் முத்திரை...


பத்தரைமாத்து தங்கங்களே

தமிழின சிங்கங்களே

வாழ்த்துமழை கூறி

அன்பால் இணை..

மனதிலகற்று வினை

சிறக்கட்டும் மனை

விழியாகட்டும்

மொழியின் துணை

அதுவே நிறுத்தும்

புகழ்ஏணியில் உனை...

*** *** ***

மணபானை நீர்

பனைநுங்கு பதநீர்

பழையகஞ்சி நீர்

இளநீர்.. மோர்..

பொங்கவெச்ச சோறு... 

தலைவாழை விருந்து..


சோளக்கம்பு கூழ்

ராகிக் களி..

கருப்பட்டி வெல்லம்

எள்ளுமிட்டாய்.. 

கல்ல(கடலை)மிட்டாய்

பருப்புவடை, மாவிளக்கு.. 

அரிசிமுறுக்கு.. அதிரசம்

கொள்ளு/ வேப்பம்பூ ரசம் 

சிறுதானிய திண்பண்டங்கள்.. 


பல்லாங்குழி, சடுகுடு

கில்லி, கண்ணாமூச்சி,

சிலம்பாட்டம், ஒயிலாட்டம்,

கரகாட்டம், பறையாட்டம்..

இவையெல்லாம்

ஞாபகம் வந்தால்

மீண்டும்..

திண்ணுப் பார்..

விளையாடிப் பார்..

மனமெனும் 

தமிழ்வேர்களுக்கு

பாய்ந்த நீராய்

இன்பம் பொங்கும் ஊற்றாய்...

*** ***

(படிக்கும்போதே.. உங்கள் கண்கள் விரியும் குதூகலமாய் இல்லையா... முக்கியமாக அப்பன் முருகனை கும்பிட மறவாதே. 

தை / சித்திரை மாதம் இரண்டு முறை புதுவருடம் கொண்டாடும் தமிழினம்னு கூட சொல்லாம்)