அழகுத் தமிழினமே
உனதன்புள்ளத்தால் அகமகிழ்ந்தேன்
கற்றது கடுகளவு
கல்லாதது உலகளவென
கைத்தொழில் கற்பதற்கே
கட்டிடக் கலைத்தொழில் கற்றேன்
தாய்மண்ணை கைபிடித்து கரைசேர...
கனிந்த காலமோ..
தடுமாறும் வழியறியா ஆடல்ல
தடை உடைத்து சிகரம் தொடும்
தரணி போற்றும்
தமிழினத்தவன் இவனென
தலைநகரத்(இந்தியத்) தாயின்
கைபிடித்து வாழ்வதற்கே
வழி செய்தது...
அறிவைத் தேடி…
உழைப்பைத் தேடி.. உயர்வைத் தேடி…
நிற்க.. திரும்ப.. மனமின்றி ஓடினேன்..
அரை நூற்றாண்டு
அவயம் தொடும்வேளை
அறை நண்பன்.. அடித்துபிடித்தவன்
கல்லூரிக் கூடத்தில்
காரசார விவாதத்தில்
அக்கால நொடிகளை
தடதடக்க..திடுதிடுக்க..
கடக்க வைத்தவன்
அன்புக்கரம் நீட்டி அழைக்கிறான்...
மீண்டும் மனம் விரும்புகிறது
விட்டுச் சென்றதையும்
தட்டிச் சென்றதையும்
கட்டி யணைக்க..
அன்றுபூத்த மலர்களின்
பசுமை நிறைந்த
நினைவுகளை அசைபோட...
கற்பித்த குருவை வணங்கி
நன்றிக் கரம்கூப்பி பாதம் தொட ..
தெய்வத் திருவருளால்
இப்பிறவி தந்த
பெற்றவர் பெருமைகொள்ள…
நெடிய பாதையின்
கறுப்பு வெள்ளை.. கனவு நனவுகள்..
சோதனை சாதனைகள்
இன்ப துன்பங்களில் இளைப்பாறி
ஆறுதலளித்து ஆரத்தழுவி..
அன்று இணைந்த இடத்தில்
அலுமினி என்னும்
ஆரவார விழாவில்...
* * *

