Sunday, 31 December 2023

ஆளப்பிறந்தோமென அடியெடுத்து வைக்கட்டும்

அனைத்து உயிர்களும்..

இன்னலு டைத்து

இன்ப மணைத்து

ஆளப் பிறந்தோமென

அடியெடுத்து வைக்கட்டும்

ஆங்கில புத்தாண்டில்...


பிறந்தது

புதியஆண்டு மட்டுமா..?

எட்டத் துடிக்கும் எண்ணங்கள்

வெட்டியெறிந்த அழுக்குமனம்

ஒடடத் துடிக்கும் வெற்றிகள்

கொட்டி கொடுக்காத

கொட்ட மடிக்காத

கோடிமைல் தூரத்து

அன்பு உள்ளங்கள்

இனியோர் புரட்சிசெய்ய

புதியதாய் பிறந்தோமென

பெருமூச்சு விடட்டும்..


ஏமாற்றப் பட்டவன்

கைவிடப் பட்டவன் 

என்னால் யாருமில்லையென

உன்தலை நிமிரட்டும்...


உன்(னை) சுற்று(றிய)ச் சூழல்

உனைப்பெற்ற பூமித்தாய்

பெருமை யடையட்டும்

உன்செயலால்..

முடியுமெனும் மூச்சால்

இதயம் துடிக்கட்டும்

பிறக்கும்..ஒவ்வோர்

நாளும்.. நொடியும்...


வேண்டும் ஆங்கிலம்

ஆங்கில ஆண்டும்..

ஆனாலும் அகிலம்போற்றும் 

தமிழ்ப்பாடல் மணக்கும்

தமிழ்ப்பேர் இனிக்கும்

தரணியே  தழைக்கும்

அதுதரும் பண்பினை

மறவாதே..பரப்பிட தயங்காதே.🙏

***. *** ***

அதான் 2024 பொறந்தாச்சே.. சட்டுபட்டுனு அடுத்த வேலைய பாருங்க.. தயாராகுங்க.. நமக்காக தமிழன்னை காத்திருக்கிறாள்.. பொங்கல் சோறு சாப்பிட..😀)

Saturday, 30 December 2023

2024-ஆங்கில புத்தாண்டே.. வருக.வருக..

31-12-2023  இன்று
வாரத்தின்.. மாதத்தின்
வருடத்தின் இறுதிநாள்
விடுமுறை நாளென
சிறப்புடன்..சிரிப்புடன்
விடை பெற்று 
2024ற்கு வழிவிடுகிறது...

ஆங்கில புத்தாண்டை
ஆங்கில மோகத்தில்
ஆங்கிலவழியில்
கொண்டாட
மனம்சிதறி.. மலையேறி
சீரழியும் சிறைக்குள்
சிக்கிவிடாதே...
சிறுமைகள் துளிர்த்து
பெருமைகள் துளைத்து
பேரிழப்பை பரிசாக்கும்
எழுதப்படாத சட்டத்தை
எட்டிஉதைத்து எறிந்துவிடு...

காலத்தே 
பயிர் செய்தால்
நற்காலமே..
காலாவதியாக்கும்
மதுவால் 
அலங்கோலமே...

தவறுகள் திருந்திய
திருமகனாய்..
புது உணர்வால்
புது எண்ணங்களால்
புது மனிதனாய்
புதுமைபல செய்திட
பறப்படு தோழா...

வாழ்க்கை ஓர்
நெடும் பயணம்
பணத்தால்..பாசத்தால்
உறவால்.. பிரிவால்
இழந்தது எதுவும் 
நிரந்தரமில்லை..
மறுவுருவமாய்..மானசீகமாய்
உனைக்காண திரும்புமென
உறுதிக்கொள்...

அவன்.. அதை
இவன்.. இதை
எவன்.. எதை
சொன்னாலும்
செய்தாலும்..
என்மனம் சொல்வதை
செய்தேனென
உரக்கச்சொல்
உறுதியாய் நில்..
எதைச் செய்தாலும் 
இப்ப இல்லைன்னா
எப்பவும் இல்லையெனும்
எண்ணத்தில் செல்...

நீ பேசும்
நற்சொல்
நற்செயல்
நற்பவியாகட்டும்...

வாழும் வரை
நீ வீழும் வரை
வணங்கும் 
வாழையாய் மாறு.. 🙏

Friday, 29 December 2023

தமிழினத்தோலில் மின்னிய பொன்மனச் செம்மல்...

 



கறுப்பு வெள்ளை 

கனவுகளை

வண்ணங்களால்

அலங்கரித்து

ஆராதனை செய்தவர்...


சிவப்புத் தோல்கள்

மின்னிய விளக்குகளில்

கறுப்புத் தோலை

மின்ன வைத்தவர்

பொறுப்புள்ள அண்ணனாய்

தம்பிகளின் முன்

பொன்னாய் ஜொலித்தவர்...


ஓசியாய் ஏமாற்றி

பாசாங்கு செய்தவர்முன்

பசி என்பதையழித்து

பாசத்திற்கு மறுபெயரானவர்...


நிழல் உலகில்

வேடம்தரித்த இவர்

நிஜ உலகில் 

கபடதாரிகளை  உரித்தவர்...


சொல்லால்.. செயலால்

பொன்மனச் செம்மலின் 

உருவத்தில் வாழ்ந்த

கறுப்பு வைரம்...


அகிம்சை அழித்து

தேசப்பற்றை நெஞ்சிலேற்றி

கண்ணகளால் தீப்பொறி

பறக்க வைத்தவர்

நீதிக்குத் தண்டனையெனும்

அநீதியை அறுத்தெழ 

ஒன்றுசேர் தோழாயென..

கனல் வார்த்தைகளால்

இளம் தலைமுறையை

கட்டி இழுத்தவர்

தன்மானத் தமிழனை

தட்டி எழுப்பியவர்...


ஆண்டாள் பெற்ற

இம் மைந்தன்

அன்புள்ளத்தால்

ஆண்டவன்..

எனும் பேறுடனே மறைந்து

மக்கள் மனதில் நிலைத்துவிட்டான்

என்றென்றும்...🙏

Sunday, 24 December 2023

பா...வுக்கே இலக்கணமான சுபா...



 பா க்களால் 

பாரதப் பிள்ளைகளை

தாலாட்டியவர்

பரங்கியரை அதிரவைத்தவர்...


எழுத்தாணியால்

செதுக்கிய எழுத்துக்களால்..

ஏனென்ற கேள்விகளால்..

ஏவுகணை செய்தவர்...


ஆறாத சினத்தால்

தீயவரை துளைத்துவிடு தோழாயென

புதுமைப் பெண்களின்

மனதில் விதையானவர்..


படைத்தவனை

ஆராதிக்கும இனத்தில் உதித்தாலும் 

ஆகாதென தள்ளிவைத்தவனை

அணைத்து முண்டாசுகட்டி

மீசை முறுக்கியவர்...


பாரெங்கும் பரதேசியாய்

பழ மொழியை நுகரந்தபின்

தாய்மண் தமிழ்மொழியை

நாடி நரம்புகளில்

சுவாசித்தவர்...


உலகம் வியந்த

மொழி பிறந்த

எம் மண்ணிற்கும்

எம் பாட்டுக்கும் 

தானே தந்தையென

தேசத் தந்தைமுன்

தலைக்கனம் காட்டியவர்...


காக்கை குருவிகளும்

நம் இனமே

காணி நிலமானாலும் 

அதற்கும் பங்குண்டென

தலையில் தட்டியவர்...


செல்வம்பின் செல்லாது

செல்வந்தர்பின் நில்லாது

செல்லம்மா.. செல்லம்மாயென

சொல்லிக்கொண்டே 

இருந்துவிட்டார் இறக்கும்வரை...


இந்திய மண்ணில்

இவனைப்போல்

இனியொருவன்

இனிமேல் இல்லையென

எண்ணியவர்..ஏசியவர்..

அழுதவர்.. ஆகாதவர்

அனைவர் மனதிலும்

சிம்மாசனமிட்டு

இறக்கும்வரை 

இருந்துவிட்டார்..


யார்.. யாரென

யாரும் கேட்காமல்

யாவரும் நலமடையவே

பா.... வுக்கே இலக்கணமான

பா.. என்னும் சுபா...🙏

* *


இன்று பாரதியார் பிறந்தநாளில் அவரைத் தொழவேண்டும்...  இல்லையெனில் தமிழனாய் அவரை நினைத்து பெருமைகொள்வோம்.. தமிழினமே...🙏

வாட் நெக்ஸ்ட்டென வாட்சப்கால் பேசும் மும்மூர்த்திகள்

 வாய்க்கா..வரப்பு

சண்டை போடாமல்

சிண்டு முடிக்காமல்

துண்டு போட்டு

செந்தமிழ்.. கொடுந்தமிழ்

செல்(Cell)தமிழால்

தொண்டாற்றிய

வாண்டுகளை

நோண்டி நொங்காமல்

தோண்டி துருவாமல்

மண்டை உடையாது

மண்டி யிடாது..

அண்ட வைத்து

அண்டாகுண்டா ஏதுமின்றி 

அலைக் களித்து 

கண்டு.. கேட்டு களைப்பாக்கி

பண்டிதனாக்கி

அண்ட மடக்கிய பிண்டமாய் ...


நமக்குள் தூங்கிய

நவ ரசங்களை

தட்டி எழுப்பி..

அறு சுவையை

பார்வையால் ஊட்டி..


உலகை மயிலால் 

சுற்றிய முருகனாகாது

உள்ளங்கையால் சுற்றி

கணபதியாக்கி

பானைவயிறு வீங்க

எந்நேரம் காதலாய்

பணிவாய்.. பவ்யமாய்..

தலைகவிழச் செய்து...


செய்தியா.. சேவையா

குப்பையா.. கும்பிடுவதா

சீர்தூக்கி பாராது

பணமில்லாது..

பிச்சையெடுக்காது

எம்மொழியும் சம்மதமென...


முப்பால் சுவையால்

முப் பாலினமும்

ஒன்றுகூடி.. படிக்க 

வேற்றுமை யில்லா

ஒருமைப்பாடு பழக...


உப்பு சப்பில்லாத

கதையா.. கவிதையா

இலக்கணப் பிழையா

இங்ஙனம் காணாது..

தினம் தினம் தவறாது.. 

குனிய வைத்து

குட்டிக் கரணமின்றி

ஏங்க வைத்து..

சிரிக்க வைத்து

சிந்திக்க வைத்து...


உலகமே இருண்டாலும்

நீயின்றி.. இவ்வுயிர் 

வாழாதென போதையேற்றி

மயங்க வைத்து

உறவுகளை தள்ளி

உடலையொட்டி உரசும்

அலைபேசி அங்கமே..

கடலளவு பூமியை

கடுகாய் சுருக்கும் 

கையளவு உலகமே

அதில் என்றும் மின்னும்

வாட்சப்குரூப் தங்கமே...

உனக்கு கோடி வந்தனம்...


வழக்கம் போலவே

குறைவின்றி  வளரும்

உன்சேவை ஒன்றே

பிறக்கும் இப்புத்தாண்டிலும்

வாழ்க பல்லாண்டு..


இந்த மனித இனம்வாழ

ஐம்பூதங்கள் போதுமென

நினைத்த இறைவன்கூட

ஆறாவதாய் உனை

படைத்தவனை

பிரமிப்பாக பார்க்கிறான்..

கூட்டமில்லா கோயிலுக்குள்

தனியாகும் நிலைதானோ..!

வாட் டு டூ..  வாட் நெக்ஸ்ட்டென

முப்பெரும் தேவர்கள்

வாட்சப்கால் பேசுகின்றனர்...😁

* * *

Thursday, 21 December 2023

*தத்தை மொழியால்.. வித்தை செய்தவள்..*

🪷🌹🎂முழுமதி.. முகமால்

மீன் விழியால்

தத்தை மொழியால்

வித்தை செய்தவளே...


நித்தம்.. நித்தம் 

என்சித்தம் சிதற

சிரம் தாழ்ந்து

கரம் கோர்த்தவளே..

வாழ்வெனும் வசந்தத்தில்  

ஓர்தவப் புதல்வனை 

பரிசாய் தந்தவளே...


உள்ளம் உவந்து

விருந்தோம்பல் புரிவதே

கடமை யெனும்

பெற்றவரை பெற்றவளே..

அன்பு.. அழகு 

ஆளுமை.. கருணை

பொருள் பொதிந்த

*அனிதா*எனும் பெயர் கொண்டவளே..


உன்சொல்லால் செயலால்

உனைநாடும் மனிதர்

துடுப்புகண்ட ஓடம்போல்

ஒடிந்த மனமாறி 

துடிந்த நிலையேறி

நலமாகி.. வளம்காண

வாழ்த்துகிறேன்..

22-12-2023.. இன்று

பிறந்தநாள் காணும்நீ

ஆண்டவன் அருளால்

நீடூழிவாழ வாழ்த்துகிறேன்...💐

*** *** ***

*வீ. சீனிவாசன்*

(உன்இணை சேர்ந்து வாகை சூடும் கணவன் )

Sunday, 26 November 2023

சிந்தனைக் கேணி..



பார் போற்றும் 

பகுத்தறிவு ஞானி

பாவங்களின் சிரமகற்றிய

சிந்தனைக் கேணி

அறிவினம் காத்த அச்சாணி...


பெண்ணடிமை

மடமை களுடைத்து

இனப்பிரிவு இழிவால்

பாதகப் பழியால்

பள்ளத்தில் விழுந்த

உள்ளத்தை உரமாக்கி

வெற்றி வேர்வையால்

சுதந்திர சுவாசமளித்த

வெண்தாடி வேந்தன்...


மூச்சுள்ளவரை பேச்சால் 

வசை பாடியவன்

போர்க்குண மனதை

பட்டைத் தீட்டியவன்

பழமை வாதிளை 

முரட்டிப் புரட்டிய

ஈரோட்டுக் கிழவன்..


மதமெனும் மனம் கவ்வாத

இம்மண்ணின் கவசம் யார் 

ஏற்றத் தாழ்வை ஏறிமிதித்த

கலியுகக் காவலன் யார்

எவராயினும் எதுவாயினும்

பகுத்தாய்ந்து பல்லுயிர் ஓம்பிய

அறிவுச் சமூகத்தின்

ஆற்றல் யாரென

தரணி வியந்த பதிலாய் 

உய்த்தவன் உரிமையுள்ளவன்

தமிழினம் மறவா

தந்தை பெரியார்...


கடவுளில்லை யெனும் 

போதனை எமக்கில்லை

என் தாய்மொழியை செதுக்கியவன் இவனென

மாடசாமி.. மயில்சாமிகளும்

வணங்கிய *ஈவெராமசாமி*

வாழ்த்துவோம் இந்நாளில்

ஒற்றுமையாய் ...🙏

*** *** **

Friday, 24 November 2023

தூர்வார.. போர் தொடுங்கள்..


மலரினும் மென்மை
மெல்லினத் தேவதைகள்
வல்லூறுகளின்
வல்லுறவுகளால்
சிதறும் காகிதங்களாய்
மாறும் அவலங்கள்
வேரறுக்க... தூர்வார 
போர் தொடுக்க
கை கோருங்கள்..

கடவுளாய் சுமக்கும் 
தங்கத் தேர்களின்
களங்கச் சக்கரங்களை 
கழற்றி எரியுங்கள் 
அன்பான ஆணினமே...

இரண்டு கைகள்
இணைந்த உறுதி
எழுப்பும் ஓசையே
இவ்வுலகம் உந்தும் 
விசையாகும்...

புன்னகைப் பூக்களால்
இன்பமி ரட்டிப்பாக
துன்பத்தை துவைக்கவே
ஓடுகிறோம் நாங்கள் 
அழகு நதிகளாய்...

ஆர்ப்பரிக்கும்
கடல் சுனாமியாக..
பேய்.. பிசாசுகளாக
பூலோக காளியாக..
மாறும் நிலைக்கு 
தள்ளி விடாதே 
அதிகார  வர்க்கமே
இருகரம் கூப்பி
வணங்குகிறோம்
நாங்கள்...
* * *

அனைத்துலக
பெண்களுக்கான வன்முறை ஒழிப்பு நாள்.. இன்று

இதுபோன்ற நாள் இனி தேவையில்லையென ஆதரவுக்கரம் நீட்டி.. சிந்தித்து செயல்படுவோம்


Saturday, 18 November 2023

ஆ......ண்(டவன்) கள் தினம்

 


அவன் இவனென
அன்புடன்
ஆதிக்காலம் முதல்
ஆயுட்காலம் வரை
அனைவரும்
உச்சரிக்குமோர் மந்திரம்
ஆண் எனும்
கனவுலக தந்திரன்
ஆம்...‌ இவன்
ஆழ்மனமுள்ள எந்திரன்...

ஆ.............ண் 
நெடில் என்பதால்தான்
அவன் நெஞ்சுரம்
நிறைந்தவன் ஆகிறானோ...!

உள்ளக் குமுறலை
ஊர் அறியாமல்
உள்ளுக்குள் அழுகிறானோ..!

ஆண்(பால்) தரும் மயக்கம்
பல போதைக்கும் 
அடிமையாகிறானோ.!

பெருமையாக
எல்லோர் சுமையும்
முரண்பாடுள்ள
பெயர்களையும்
சுகமாக சுமக்கிறான்..

பல நேரம்
பெற்றதுக்கும்
பெற்றவருக்கும்
தாயாகிறான்...

மெழுகுச் சிலையாய்
ஒளிரும் பெண்ணுக்குள்
எரியும் திரியாகிறான்...

முடியும் வரை
முடியாது எனும்
வார்த்தையை
முறியடிக்கவே
முடிவு காலம்வரை
போராடுகிறான்...

படைப்பாற்றல்
உள்ளதால்தான்
முதல் ஈரெழுத்தை 
சேர்த்துக் கொண்டானோ..?
நமை படைத்த
ஆண்........டவன்..


Sunday, 15 October 2023

3 எழுத்தில் மூச்சுண்டு.. மும்மத கடவுளுமுண்டு..

 

எம்மதத்தில்

எவ்வினத்தில் பிறந்தாய் 

என்பதல்ல  பெருமை

எத்தனை காலம் 

எத்தனை பேர் 

மனதில் வாழ்ந்தாய்

என்பதே பெருமை...


மூன்றெழுத்தில்

மூச்சுண்டு

மும்மத கடவுளுமுண்டு

மனிதமுண்டு மாண்புமுண்டு..


பிறர்நலமே தன்னலமென 

வாழ்ந்த மனிதன் 

இம்மண்ணில் இன்னும் 

இருந்திருக்கலாம்

நனவான கனவுகள்

செழித்தபின் 

மறைந்திருக்கலாம் 

என்று நினைக்கலாம்

எனில்..

மாணவ மனங்களில்

எக்காலமும் மணக்கும் 

அப்துல் கலாம்

பெயரொன்றே உச்சரிக்கலாம்...


"நமக்கும் ஓர்பக்கம்

வரலாற்றில் இருக்கட்டும்

வனம்வளர  இனம் வளரும்

சிறுவுயிரும் உறவாகுமென"

அவர் பதிவை

பசுமரத் தாணியாய்

மனதின் கனவுகள்

மண்ணின் விதைகளாகட்டும்..

* *

அவுல்பகிர் ஜைனுல்லாப்தின் அப்துல் கலாம்

APJ Abdul Kalam.

Missile Man of India

பிறந்த நாள் இன்று அவரை நினைவுகூர்வோம்.

.🙏

Sunday, 1 October 2023

ஆயுளுள்ளவரை ஆட்டுவித்தவன்...

 



வெள்ளையனை எதிர்த்த வீராதிவீரன்..

வீரபாண்டிய கட்டபொம்மன்


ஆதிதேவன் அவதாரம்

பரமசிவன் ..

ஆன்மீகம் பழுத்த அப்பர்

சுதந்திர போராட்டத்

தியாகி வ.உ.சி 

பாட்டுத் தலைவன் பாரதியென 

மண்ணின் வரலாற்றை

இனத்தின் பண்பாட்டை 

கண்டிராத இளைய தலைமுறைக்கு

காண்பித்து.. கற்பித்தவன்...


அண்ணனா... நண்பனா

கண்ணனா.. கணவனா..

ஏமாளியா.. கோமாளியா..

கள்வனா.. காதலனா..

இருப்பதும் ஓர்நிலையே 

அதுபோல் வாழ்வதும் ஓர்கலையேயென

உறவுகளின் உன்னதத்தை

உணர்த்தியவன்

நான் அசைந்தால அசையும்

அகிலமிங்கேயென 

அனைவரையும்

ஆயுளுள்ளவரை  ஆட்டுவித்தவன்...


கொழுத்த செல்வந்தன்

பரம சாது ஏழை

ஊனமுற்ற ஊமையென

குரலால்.. பாவனையால் 

நடிப்பின் நூலகமானவன்

அவன் வாயுச்சரித்த வசனவரிகள் 

தமிழினம் மறவா முகவரி...


நம்முள்ளம் கவர்ந்த

உலகம் வியந்த

சூரக்கோட்டை தந்த தமிழன்

சிவாஜி கணேசன் என்னும்

சிம்மக் குரலோன்...

பேரைச் சொன்னாலே

ச்சும்மா... அதிரும்

அகில உலகமும்..🙏

 * * 

முதியோரெனும் ஆணிவேர்

 




ஆணிவேர் ஆழமானதால்

ஆலமரம்கூட

ஆண்டாண்டு காலம்

அழியாது நிற்கிறது

மனித இனம் தாங்குவது

மூதோர் எனும் வேர்களே...

 

அவ்வப்போது

ஆசிரியரைக் கண்டால்..

நமை அறியாமல்

பாதம் பணிவோம்


ஏனோ..  மனம் 

ஏற்றிவைத்த ஏணியை

நமை ஈன்றவர்

நம் முதியோரை

வணங்க வருவதில்லை..


எல்லா வாய்களும் ஓர்நாள்

பொக்கை வாய்களாகும் 

அதில்வரும் சிரிப்பும் அழகே..

அவ்வழகை தரும் ஆனந்தம்

நாமும் தரமறவோம்..🙏

* * *

தங்கம். வீகோசீ

புதுதில்லி


சி.கு: என்றாவது தாய்தந்தை அல்லது தாத்தா பாட்டியின் அருகே அமர்ந்து கைவிரல் அல்லது கால்விரலின் அழுக்ககற்றி நகம் வெட்டி இருக்கிறீர்களா..

நான் செய்திருக்கிறேன் 

என் பாட்டிக்கு. . தவறாக சிறிது இரத்தம் வந்த வலியின் வேதனைகூட தெறியாமல் அவ்வளவு ஆனந்தமாக சிரித்தது😀

Friday, 15 September 2023

அண்ணா வைப்போல் ஆகுமா உன்நா


பேச்சும் மூச்சும்

மனிதனின் பிரதானம்

அண்ணாவின் இவை

அனைத்தும்

தமிழனுக்கே தானம்.


பேச்சும் மூச்சும் கீதம்

அண்ணாவின் இந்நாதம்

ஆர்ப்பரித்த நம்

இனமடக்கிய தாகம்..


சிலநேரப் பேச்சுக்களே

பலநேர வரலாற்றுக்கள்

பேச்சுக்கலை- அது

பறிக்ணும் களை

வளர்க்கணும்

பலர் மூச்சுகளை...


கடமை கண்ணியம்

கட்டுப்பாடு மூன்றும்

மூன்றெழுத்து முத்தாய் 

தமிழின வித்தாய்

*அண்ணா* உதித்த

மனிதன் சொத்தாய்

காதுகளில் ஒலித்துக்

கொண்டிருக்கிறதென

மறவோம் இன்று...


ஆகச் சிறந்த

பேச்சாளர் அண்ணா -அவரால்

எவரும் பெற்றிலர் இன்னா

முயன்றால் அவன் போலாகும் 

எந்நாளும் உன் நா..💐💐

*** *** **

Sunday, 10 September 2023

போர்த் தொழில் தேவையா..மானிடா

 


எதிர்பாராமல்

எதிர்வினையால்

எதிர்கொள்ளும்

ஏச்சுக்கள் பேச்சுக்கள்

ஏராளம் இவ்வுலகில்...


ஆரவாரமில்லா

அதிசயங்கள் 

ஆச்சர்யங்கள்

அதிர்ச்சிகள் நிகழ்வுகள்

குழப்புகிறது மனதில்..


ஆடல் பாடல்கள்

கேளிக்கைகள்

ஆட்கொள்வதும்

கலவரங்களால்

ஒடுங்குவதும்

ஒடுக்குவதும்

வாடிக்கை இங்கே..


நிமிடங்கள் யாவும்

நிரந்திரமின்றி ஓடுகிறது

முதுமை இளமையை முந்துகிறது

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் மணப்பதால்

பலியாடுகள் விழுந்த

பேராசைகுளம் நிரம்புகிறது..


நீ.. நானென ஒதுங்காமல்

நாமென இணைந்து

தோற்பதும் ஜெயிப்பதுமே

போராட்டம்

நன்மை நூறாயினும்

ஓர்தீமையால் ஒதுக்கிவிடும்

இம்மனித இனம்...


காய் நகர்த்தாமல்

காயப் படுத்தாமல்

கவசம் இடாமல்

நேர்கொண்ட பார்வையால்

கலங்காதுநில் மானிடா...


எது தேவையோ

அதுவே தர்மமாயின்

செய் தொழிலோடு 

போர்த் தொழிலும்

பழகுவாய் மானிடா...

*. * *

கள்ளம் கபடமில்லா கதைகளால் வாழைப்பழத்தில் நுழைத்த ஊசிபோல் நம்மை நெறிபடுத்தி வளர்த்த தாத்தா பாட்டியின் ஆசீர்வாதம் பெற்று அவரை வணங்குவோம் இன்று...

* * *

Tuesday, 5 September 2023

இருளைப் போக்கும் அருளாளர்களை வணங்குவோம்

                                           


 மூச்சை வளர்த்தது கருவறை

பேச்சை வளர்த்தது வகுப்பறை..

நேயம் வளர்த்தது திருமுறை

நற்பண்பை வளர்த்தது படிப்பறை,.

உயிர்காப்பவன் ஈசன்

உயர்வாக்குபவன் ஆசான்...


ஊதாரி உள்ளமும்

மதியா திமிரும்

உள்ளேன் ஐயா..யென

மண்டியிட்ட ஆடாகும்

ஆசானைக் கண்டால்..

நீரின்றி அமையாது

உலகெனின்

நீயின்றியும் அமையாது நல்வுலகு... 


கருவறை கடவுளை வணங்கினால்

மனம் பண்படும்

வகுப்பறை ஆசிரியரை வணங்கினால்

வாழ்வு வளம்பெரும்


கற்காலமோ

கணிணி காலமோ

எக்காலமும்

இருளைப் போக்கும்

அருளாளர் ஆசிரியர்கள்..


மாணவர்களே..

உறங்கும் உன்மதியை 

உணர்வால் மிதித்து

செயலால் செதுக்கி

மானமுள்ள மனிதனாய்

மாண்புமிகு தலைவராய்

முகவரி கொடுப்பவர்

ஆசிரிய ரெனும்

மாணிக்கங்களே..

அரண்மனை காக்கும்

மதில் போல்

ஆசிரியரைக் காக்கும்

காவலனாவோம்...


ஓர்பிறவி தந்த

பெற்றோரைப்போல்

மறுபிறவி தரும்

ஆசிரியர்களின்

பாதம் பணிய 

மறவோம் என்றும்...

* * *

அனைவருக்கும் இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.💐

Saturday, 2 September 2023

எதையும் எனதாக்கும் எவனும்

 



வறண்ட தோல்

வாடிய முகம்

ஒட்டிய வயிறு

ஒடிசல் தேகம்

உலர்ந்த வாய்

உடைந்த மனம்

 

மண்ணை தொட்டு

வாழும் உழவன்

நிலையும் இதுவே..


மண்ணில் வீழாது

விண்ணிலேறி

வாகை சூட 

வழியேற்றும் தந்தை

நிலையும் இதுவே..


எல்லாம் பெற்று

எகத்தாளமாய் வாழ்பவனும்

ஏய்த்து வாழ்பவனும்

ஒற்றை நாடியில்

கடைக்கோடி நிற்கும் 

நிலையும் இதுவே..


எதையும் எனதாக்கும் 

எவனும் ஒன்றுமில்லா

நிலையும் இதுவே..


ஆதலால்..

ஆடி அடங்கும்வரை

அடக்கமாய் வாழ்வீர்..

கர்மவினைகளுள் சுழன்று

இன்னுயிர் உழன்று

கரைவதற்குள்

நேசக்கரம் ஊன்றிய

விதைகளாய்

மண்ணிற்குள் உரமாவோம்

நம்பேர் மணம் 

வீசும் மரமாவோம்...

* * *

Sunday, 27 August 2023

அன்னை தெரசா என்னும் அன்பு தெய்வம்...

 

அன்பு என்னும்

மூன்றெழுத்தே

உயிர்களை உயர்வாக்கும் 

மந்திரமென உலகிற்கு

உரக்கச் சொன்னவள்


அயல் தேசத்து

கன்னியிவள்

நம்தேசத்தில்

கன்னியாஸ்திரியாக

வாழ்ந்தவள்..


பாரத தேசத்தின்

நோயாளிகள்

அனாதைகளென

ஒதுங்கியவர்களை

ஆதரவுக்கரம் நீட்டி

அரவணைக்க

மீட்டெடுக்க

தம் வாழ்வை

அர்ப்பணித்தவள்

நம் மண்ணிற்குள்

உரமானவள்..


அன்பு உள்ளத்தால்

அன்னையென

வணங்கப்பட்டவள்

உலகெலாம் 

உயரிய பலவிருதால்

அலங்கரிக்கப்பட்டவள்..

இன்று இவள்

பிறந்த நாளில்

பெண்ணினத்தை

மதிக்கும் 

சமஉரிமை நாளும் 

கொண்டாடும் 

பெருமை கொள்கிறது

இவ்வுலகெங்கும்...


நாமும் அவளை

நம்மின.. மகானாய்

நினைவில் வைத்து

அவள் வாழ்வின்

படிப்பினை எடுத்து

அன்புக்கரம் கோர்த்து

மதம் மறந்து

வணங்குவோம்

மதர் தெரேசாவை...🙏

* *

Saturday, 19 August 2023

அப்பாடி.. ஆடி ..

வாய் பிளந்தால் ஆத்தாடி...

காற்றில் பறந்தால் காத்தாடி...

கூழ் ஊற்றினால் அம்மன்ஆடி

அவளை வணங்கும்

பாடல்தேடி ஆடிப்பாடி

கூடி ஆடினால் கூத்தாடி..


தள்ளுபடியில் மனம் அள்ள

வைத்தது ஓடியோடி...

புதுமணத் தம்பதியை

தள்ளிவைக்கும் தலையாடி ...

எம்மாடி.. இதெல்லாம் ஏனிப்படியென

காணும் நம் முகம்வாடி

சுத்த வைக்குது தலையாடி...


அனைத்தும் இனிதே முடிந்தது 

இம்மாதம் ஆடி...🪷🪷

*** *** 

உலக மனிதநேய தினம்


நேயம் இல்லாத

மனிதம் உண்டா..?


மனிதா..

எது இல்லையோ

எது தேவையோ

அதைத்..தா  

அல்லது

தருவித்து தா...


அளவில்லாத செல்வம்

அளந்து தராவிடினும்

அன்பெனும் ஆடையை

நேசக் கரங்களால் தை..

கூடிவாழும் முறை 

உண்டென்பதை

மனதில் விதை...


நீ 

மனிதனா..மாமனிதனா

மன்னனா..மாமன்னனா..?

உன் விழி மூடுகையில்

வழியைக் காணாத

வலியால் துடிக்கும்

விழிகளே சொல்லட்டும்..


இவரைப்போல

மண்ணாசை 

மனயாசையில்லா

மனிதநேயன்

மீண்டும் பிறக்கட்டும்...


கண்ணனோ.. கள்வனோ 

அல்ல கேள்வி

கருணை யுள்ளவனா

எனக் கேள்..

உனதருகே வாழும்

உயிர்களுக்கும்

மண்ணுக்கும்

எதைத் தருகிறாய்

என்பதைக் கேள்...


இன்று மனிதநேயம்

கொண்டாடும் நாள்

அதற்கு தகுதியுள்ளவனா 

உனக்குள் கேள்...

*** ***

Tuesday, 15 August 2023

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (Happy Independence Day)

 

மாநிலம் பல

ஒன்றடங்கியது 

எங்கள் தேசம் 

இனங்கள் பல

ஒன்றிணைந்தது

எங்கள் நேசம்

இன்னலும் வலியும்

மரணம் கடந்தே பெற்ற

இச்சுதந்திர சுவாசம்

தந்த தியாகிகளே

நமது தலைக்கவசம்...


இன்றெமது கைகளில்

தவழ்வது ஓர்கொடி

தாயின் மணிக்கொடி

என்னும் தேசியக்கொடி...


எம் மதமாயினும் 

எம் மொழியாயினும்

இந்திய னென்னும்

பெயரே பெருமை..

நம் பேச்சும்..மூச்சும்..

சொல்லட்டும் அதனருமை

அதுவே யிருக்கட்டும்

தலையாய உரிமை

முடியும்வரை 

நாட்டைக் காப்பதும்

கடமையென

உயிரான தாய்மொழியில்

உள்ளத்திலெடுப்போம் உறுமொழி...


ஊருமுறவும் துறந்து

எங்கோர்.. மூலையில் 

எதையும் ஏங்காமல்

தாய்நாடே தன்னுயிராய்

காக்கும் காவலனை

வாழும் தியாகியை

வணங்குவோம்

குல தெய்வமாய்

தவிக்கும் அவனுறவை

நினைப்போம் நமதாய்..🙏

* * **

Wednesday, 9 August 2023

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...(09-08-23- BD of My Son)


பிறந்தநாள் வாழ்த்துக்கள்...(09-08-23- BD of My Son)

குன்று தோறும் நின்றாடி

குலம் காத்த ஆறுமுகக்குமரா..

உன்றன்  அருளாசியோடு

இன்றுதித்த என்றன் குமரனை...

 

திருக்குறள் திருப்புகழ் திருமுறை

தேவாரம் திருவாசகம் தேன்தமிழ்

நூல்யாவும் என்றும் மறவாது ஓதி...

கற்றவர் போற்றிட மற்றவர் கற்றிட

செல்லுமிடம் யாவும்

நின்று முயன்று வென்றிட..

 

தமிழனாய் பிறப்பதற்கோர்

தவமிருத்தல் வேண்டுமென

இறைவன் பாதம்பணிந்து

வேர்மறவா தளிராய்.. தாய்மொழி போல்

சிறப்புற்று வாழ்ந்திட

காத்தருள்வாயென வேண்டுகிறோம்...

 

எந்நாளும் போலவே... இந்நாளும் இல்லையென

நமக்கடுத்த தலைமுறை.. தழைத்து விட்டதென

சற்றே.. ஆனந்தமாகிறது தாய்தந்தை மனமின்று,..

Friday, 4 August 2023

ஏழைகளின் ஆப்பிள்..💐

Happy Bloggers Day

ஏழைகளின் ஆப்பிளாக

பூத்துக் குலுங்கி

ரசித்து.. ருசித்த

தக்காளி.. இன்று 

தங்கம் நிகராக..

அடுத்தது

ஆகாச விலையில்

அரிசியும்தான்...

 

அன்னமிட்ட  கைகளில் 

கிண்ணம் திணித்து

பச்சைக் காடழித்து 

பிச்சைப்பணம் வளர்த்த

வானுயர வீடுகளானால்..

அலங்கார அடுப்பில் 

பூனை படுத்துறங்கும்

நம் பிள்ளை 

வயிறு சுருங்கும்...


இன்றைய 
அவலநிலையை தோலுரித்து

தொப்பையை தொங்கவிட்டு

நிமிர்ந்த தலைகளை

நாக்கடிமையால் குனியச்செய்த 

நகர வாசிகளே...

 

 வரகும்.. கேழ்வரகும்

தினையும்.. பனையும்..  

எள்ளுருண்டை கடித்தவர் 

இடித் துரைக்கவும் 

இன்னுமது அழியவில்லை 

இதை யுண்டவர் 

நோயண்டி வீழ்வதில்லை... 


வாழும் கலையும்

வழித்து உண்ட 

வாழை இலையும் மறவாதே.. 

உழவன் ஒதுங்கினால்

உலக வாழ்வு சிறக்காதே...


தரணி போற்றும்

இனிய இனமே..

இனியாவது விழித்திடு

வளமான சமூகம்

நிலைத்திட..செழித்திட ..

வழியுண் டெனத்தேடு

தமிழன் என்றோர்  

இனத்திற்கேது யீடென
எழுதட்டும் ஏடு...

* * *💐

Monday, 31 July 2023

6 மனமே 6 /7 தசாப்தங்கள் வாழ்வா... அல்லது 8 எட்டுக்குள்ள வாழ்வா... எது சரி..?

கண்ணதாசன் அவர்கள் தன் பாடல் மூலம் 

6 கட்டளை / கொள்கைகளை கடைபிடிக்கச் சொல்லி ஆறு மனமே ஆறு என்றார்..


வைரமுத்து அவர்கள் தன் பாடல் மூலம் 

நமது வாழ்க்கையை 8 எட்டாக பிரித்து முன்னேற்றம் காணவும்,  64க்குப் (எட்டாவது 8) பிறகு இருந்தால் நிம்மதி இல்லை என்கிறார்..


சரியாகப் படுகிறது என்றாலும்கூட..  நமது சிந்தனையில் இக்காலச் சூழலில் சிந்தித்தோமெனில்...


வாழ்க்கையை

10 பத்தாக இல்லை இல்லை 7 பத்தாக பிரித்தால் சரியாக வருமென பார்க்கலாம்..


(7 என்னும் எண் எல்லா காலத்திலும் சிறப்புள்ளதால் ..)


முதலாம் 10-  சிறுவர்  பருவம்


2ம் பத்து  - கல்வி / விளையாட்டு 


3ம் பத்து - திருமணம் சந்தோசம்/சந்ததி பெறுதல்


4ம் பத்து- பிள்ளை வளர்ப்பு / சொத்து சேர்த்தல்


5ம் பத்து - சொத்தை பாதுகாத்தல் / கடமைகள் முடித்தல்


6ம் பத்து - ஆன்மீகம் /ஊர் சுற்றுதல் / மற்றவர்களுக்கு உதவுதல்


7ம் பத்து - அனுபவம் பகிர்தல்/ அமைதி வழி இருத்தல் கடைசி நொடிகளை நோக்கி...

Sunday, 30 July 2023

உழவனை தொழுவோம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நகரம் விட்டு

விவசாய நிலம் நோக்கி குடும்பத்தை கொண்டுசெல்வேன்..

அந்த வயல்களில் பயிர்களிடம் சிறிதுநேரம் கொஞ்சிக்குலவி வரும்நேரம்..  அவ்விவசாயி கைகளில் காய்கறிகள் வாங்கியபின் பணம் தரும் நேரம் அவர்கள் முகங்களில் ஏற்படும் சிரிப்பும் புன்னகையும் அவ்வளவு ஆனந்தம் தரும்..


சில வாரங்கள் கால சூழ்நிலையால் போகமுடிவதில்லை..

ஆனால் இன்று மீண்டும் போகிறேன்.. 

நண்பன் செந்திலுக்கு நன்றி..

குறிப்பு: டெல்லியின் அருகில் உள்ள உ.பிரதேசம், ஹரியானா மாநில விவசாயிகள் தமிழனைக் கண்டால் மிகமிக அன்பாய் வரவேற்பார்கள்.. மதிப்பார்கள்.. ஏனெனில் உழவனை நாம்தான் உயிராய் மதிக்கிறோமாம்..





இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

 


மிகவும் முயற்சிக்குபின்

தோல்வியுற்றதால்

இடிந்து போன நேரம்..


மனைவிசொல்

அதை மறந்துவிடுங்கள்


பெற்றோர்சொல்

பரவாயில்லை

விட்டுத்தள்ளு


பிள்ளைகள்சொல்

அடுத்தமுறை

வெற்றியாகும்


உற்றார் சொல்

இவனால் முடியாது


யார் சொன்னதும்

கேட்காமல்

வாசலை காண்கையில்

இருகரம் ஆரத்தழுவியது

நான் இருக்கேண்டா..


ஆருயிர் உறவான

நண்பனின் கைகளே 

கண்கள்...கலங்கியது

நம்பிக்கையில்

மனம் உறுதியானதால்..

* * *

🧑‍🤝‍👨அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..🧑‍🤝‍👨

Saturday, 22 July 2023

உலக பெற்றோர் தினம்

தங்கம். வீகோசீ (Thangam VEEGOSEE)

💐அற்றவரோ..
துற்றவரோ..
கோவணம் 
தற்றவரோ...

செற்றவரோ..
உற்றவரோ..
எதற்கும் ஏற்றவரோ..

கற்றவராயினும்
பற்றவராயினும் 
நாலும் அறிந்த
நற்றவராயினும்...

வேற்றுலகம் மாறாது
வெற்றிப் படியேற்றி
வெற்றிடம் நிரப்பும் 
பெற்றவரைப்
போற்றுவோரே..
குற்ற மற்றவர் 
குறை கூறும் 
உலகைக் 
    கொற்றவர்...💐💐
* *


குறிப்பு:
அற்றவர்-ஆசையற்றவர்
துற்றவர் -பிச்சைக்காரர்
தற்றவர் -  உடுத்தியவர்
செற்றவர் - சினந்தவர்
உற்றவர்-தகுந்தவர்
நற்றவர்-நன்னெறி அறிந்தவர் 
பற்றவர் - அன்பு/பண்புடையவர்
கொற்றவர் - வெற்றி பெறுபவர்.

Saturday, 15 July 2023

எகபசெகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

 💐பசுமை நிறைந்த

நினைவுகளை 

பழகிக் கழித்த நாள்களை

மீண்டும் பாடிக்கழிக்க

திரும்பிய பறவைகளே…


பாசப்பரிசுகளை(பிணைப்புகளை)

பள்ளத்தில் தள்ளாது

இதய இல்லத்தில் தைத்து

இன்றதை திறந்து 

இன்ப வெள்ளத்தில்

உவக்க வந்த நவ்லுள்ளங்களே...

வருக.. வருகவென

வரவேற்கிறது 

அபதொநுக (ஜிபிடி)

சரணாலயம்...

வவாச மாக இருந்த முமாச 💐💐💐

* * *

இவ்விழாவிற்கு உழைத்த

எல்லா...

கொசக்கி பசப்புக்களுக்கு...


(மன்னிக்கவும்)


எகபசெகிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..


(*எகபசெகிகள் -  என் கடன் பணி செய்து கிடப்பதே என்றிருந்த கர்மவீரர்கள்

வவாச - வருத்தப்படாத வாலிபர் சங்கம்

முமாச- முன்னாள் மாணவர்கள் சங்கம்)

Sunday, 9 July 2023

உங்களுக்கு தெரிந்த/ மறந்த வியப்பூட்டும் உண்மைத் தகவல்கள்.‌‌..

உங்களுக்கு தெரிந்த/ மறந்த வியப்பூட்டும் உண்மைத் தகவல்கள்.‌‌..

தமிழுக்கு'அமுதென்று' பேருண்டு

'கதி' என்ற பேருமுண்டு அறிவீரோ....

கம்பராமாயணம்+திருக்குறள் தான் அது.

திருக்குறள் பொய்யாமொழி மட்டுமன்று அதில் வியக்கும் அம்சங்கள் சில:

மொத்த குறள்கள் 1330= 1+3+3+0= 7

அதிகாரம் 133=1+3+3= 7

முப்பால் =38+70+25=7

வார்த்தைகள் மொத்தம் (இரண்டடியில்) = 7

ஏழு என்ற வார்த்தை வரும் குறள் = 7

(கு எண் - 62, 107, 126, 398,   538, 1269 & 1278)

அட.. இதன் கூட்டுத்தொகை கூட =62+107+126+398+538, 1269+1278 =7

சித்தருக்கு சித்தர் , முனிவருக்கு முனிவர்

திருவள்ளுவர் என்னும் கடவுள் அவதாரம் உலகத்தில் உள்ள மனிதர்கள் எவ்வாறு நெறிபடுத்தி/ நேர்படுத்தி வாழும் முறையை திருக்குறளில் எழுதி வைத்து சென்றுள்ளார்.

மேலும் சில தகவல்கள்

2 குறள் ஒரே மாதிரியிருக்கும்  பொருள் மட்டும் சற்று மாறுபடும் (கு.எண் 355 & 423 , 241&411)

2 அதிகாரங்கள் ஒரே பெயருள்ள தலைப்பு வருகிறது (அதி:   -71&128)

2 குறள்களில் பறை என்னும் வார்த்தை வருகிறது (கு 1115 & 1180)

3 பெயர்கள் 

பேரறிவாளன் (215)

அன்பறிவு (513)

வள்ளி (1304) மட்டும் உபயோகபடுத்தப்பட்டுள்ளது ஆனால் பொருள் மட்டும் சற்று மாறும்...

தமிழ்... முருகன்... என்னும் பெயர்கள் எக்குறளிலும்  குறிப்பிடப்படவில்லை

கு.560-  6 வகையான தொழில்கள்  பற்றி குறிப்புள்ளது‌.

கு. 210 - இந்தக் குறளின் பொருளில்  மட்டும் சற்று முரண்பாடுள்ளது

ஏற்புடையதாக படவில்லை என் அறிவுக்கு (நீங்களும் சிந்திக்கவும்)

4 விலங்குகள் நடப்பன -  நரி, மாடு, யானை, புலி

4 ஊர்வன -  ஆமை, முதலை, பாம்பு, மீன்

4 பறப்பன- மயில்,கொக்கு, காக்கை, ஆந்தை

4 தாவரங்கள் - தாமரை, அணிச்சம், வள்ளி, நெருஞ்சி  பற்றிய குறிப்புள்ளது

* * **"




7 என்ற எண்ணுக்கு மட்டும் அவ்வளவு ஏன் சிறப்பு...

7 பிறவிகள்
1)தேவர், 2)மனிதர், 3)விலங்கு, 4)பறவை, 5)ஊர்வன, 6)நீர்வாழ்வன, 7)தாவரம்

7 நரகங்கள்
1) கூடசாலம், 2) கும்பிபாகம், 3) அள்ளல், 4) அதோகதி, 5) ஆர்வம், 6) பூதி, 7) செந்து. (பிங்.)

7 சுவரங்கள் (ஸ்வரங்கள்)
1. ஷட்ஜம்(ஸ ச)
2.ரிஷபம்(ரி)
3. காந்தாரம்(க)
4. மத்திமம்(ம)
5. பஞ்சமம்(ப)
6. தைவதம்(த)
7. நிஷாதம்(நி)

7 ரிஷிகள்
அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியப

7 மேலுலகம்
7. சத்யலோகம்
6. தபோலோகம்
5. ஜனோலோகம்
4. மஹர்லோகம்
3. சுவர்லோகம்
2. புவர்லோகம்
1. பூலோகம் - நாம் வாழும் மண்ணுலகம்

7 கீழுலகம்
அதலலோகம்
விதலலோகம்
சுதலலோகம்
தலாதலலோகம்
மகாதலலோகம்
ரஸாதலலோகம்
பாதாளலோகம்

7 வள்ளல்கள்..(கடையேழு வள்ளல்கள்)

மேலும் சில...7...7...

இதெல்லாம் அக்காலத்தில்

இக்காலத்தில்...
7 உலக அதிசயங்கள்
7 மாநில சகோதரிகள்
7 வண்ணங்கள்
7 நாட்கள்

என சிறப்புகள் ஏராளம் உள்ளதால்..
விரும்பினாரா அல்லது 
அவர் பெயரிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையும் 
தி+ரு+வ+ள்+ளு+வ+ர்=7
என்பதாலா...

(குறிப்பு: தமிழ் அறிஞர்கள்/தமிழ்கூறும் நல்லுலகம் பிழையிருப்பின் மன்னிக்கவும் ...)
**. **
தங்கம். வீகோசீ (Thangam VEEGOSEE)