Sunday, 22 December 2024

நறுமுகையே.. நம்பிக்கையே


💐கண் சுத்தும்
தெய்வமாய்
நீ நினைத்தாய்
கண் கொத்தும்
சர்ப்பமாய்
நான் சீறினேன்...

உடல் கூனி
உள்ளம் கலங்கி
காலம் கழிவதற்குள்
நாலுபேர் நகைப்பதற்குள்
நல்வழி காட்டிய நறுமுகையே
நம்பிக்கையே...

அன்று.. என்மகனை ஈன்றதால்
மறுஜென்மம் அடைந்தாய்
அவன் தாயாய்..

இன்று.. அபாயம் அறுத்த
அவதார காளியாய்
மறுஜென்மம் தந்தாய்
என் தாயாய்...

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த
வரமெனில்..
நீயோ இறைவனாகவே
மாறி வந்தாய்...

உன் பிறப்பால்
பெற்றோர் அடைந்தது
பாக்கியமெனில்
உன் வரவால்
நான் அடைந்ததும்
பெரும்பாக்கியமே..

இன்னாருக்கு
இன்னார் என்று
இந் நாளில் (22 டிசம்பர்)
உனை படைத்தான்
எனக்காக
தேவன் அன்று...

நன்றியுடன் கையெடுத்து
நான் தொழுவேன்
உன்பெற்றவர்
பாதம் இன்று...
வாயார வாழ்த்துகிறேன்
நீ.. நீடூழி வாழ்கவென்று..💐💐
*வீ. சீனிவாசன்*
*கணவன்*

Thursday, 18 April 2024

*ஆள்காட்டி விரல் அடையட்டும் பெருமை..*

 


மீனைக் கவ்வும்
கொக்கு போல் 
காத்து கிடக்குது 
ஓர் கூட்டம்..

ஆழ யோசித்து
ஆழக் குழியில் தள்ள
காத்து கிடக்குது
ஓர் ஆணவக் கூட்டம்..

தந்திரங்களில்
வஞ்சனை செய்ய
காத்து கிடக்குது
நரிகள் கூட்டம்..

உழைக்கும் வர்க்கமே...
ஓடாய் தேய்ந்தது போதும்
புதுமை படைக்கும்
இளைய சமூகமே
நாகரிக மோகத்தில்
குனிந்து கிடந்தது போதும் ..

பலியாடுகளாய் 
முந்தைய ஆட்களின்
மந்தை ஆடுகளாய் 
இதுவரை
இருந்தது போதும்..

மான மில்லாமல் 
மாற்ற மில்லாமல்
நாற்றம் வீசிய
ஆண்டாண்டாய்
மண்டியிட்டட
மாண்புமிகு மந்திரிகளை
தூக்கியெறியும்
மகத்தான எந்திரமே
உன் கைவிரல்....

இன்றாவது
உனக்குள் இருக்கும் 
நெற்றிக்கண் திறக்கட்டும்
அருகதையுள்ள
அரசியல் பண்பாளனை
தேர்ந்தெடுக்கட்டும்
உரிமைக்குரல் ஓங்க
நிலம் செழிக்க
உன் ஆள்காட்டி விரல்
அடையட்டும்
வாக்களித்த பெருமிதம் ...
*** ***

ஆண்டவனாய் மாறிடு.. இன்றொரு நாள்



👆வாய்ப்பளித்து வாழ்வளிக்கும்

ஆண்டவனாய் ஆணையிடட்டும் 

நீ செலுத்தும் வாக்கு..


👆கையேட்டில் எழுதாதவன்

கைநாட்டால் அள்ளி

அடகு வைத்தவனுக்கு ஆப்பு

நீ செலுத்தும் வாக்கு..


👆தலைமை சரியில்லா

தலைவனையும்

தவிடு திண்ண வைக்கும்

நீ செலுத்தும் வாக்கு..


👆உச்சி முதல் கால்வரை

புரையோடிய ஊழல்புற்றை

தாங்கும் ஊழல்வாதியை

ஓர்விரலால் ஒழிக்கும்

நீ செலுத்தும் வாக்கு..


👆மாற்றம் வேண்டுமென

மன்றாடும் மனிதா

உன்னிலிருந்து தொடங்க 

இன்றோர் வாய்ப்பு 

ஓட்டெனும் சவுக்கடியால்

பாடம்புகட்டு...👍👆

(வரிசையில் நேரம் வீணாக்காமல் படித்துவிடு.. சரியென நினைத்தால். . பகிர்ந்திடு.. ஆனால் வாக்களிக்கும்போது மறவாதே😃)

Sunday, 14 April 2024

*சித்திரைப் பெண்ணே முத்திரை..*


நித்திரையில் இருந்து

சித்திரையில் எழுந்து 

சிரிக்கும் புன்னகையே 

உன் முத்திரை...


பத்தரைமாத்து தங்கங்களே

தமிழின சிங்கங்களே

வாழ்த்துமழை கூறி

அன்பால் இணை..

மனதிலகற்று வினை

சிறக்கட்டும் மனை

விழியாகட்டும்

மொழியின் துணை

அதுவே நிறுத்தும்

புகழ்ஏணியில் உனை...

*** *** ***

மணபானை நீர்

பனைநுங்கு பதநீர்

பழையகஞ்சி நீர்

இளநீர்.. மோர்..

பொங்கவெச்ச சோறு... 

தலைவாழை விருந்து..


சோளக்கம்பு கூழ்

ராகிக் களி..

கருப்பட்டி வெல்லம்

எள்ளுமிட்டாய்.. 

கல்ல(கடலை)மிட்டாய்

பருப்புவடை, மாவிளக்கு.. 

அரிசிமுறுக்கு.. அதிரசம்

கொள்ளு/ வேப்பம்பூ ரசம் 

சிறுதானிய திண்பண்டங்கள்.. 


பல்லாங்குழி, சடுகுடு

கில்லி, கண்ணாமூச்சி,

சிலம்பாட்டம், ஒயிலாட்டம்,

கரகாட்டம், பறையாட்டம்..

இவையெல்லாம்

ஞாபகம் வந்தால்

மீண்டும்..

திண்ணுப் பார்..

விளையாடிப் பார்..

மனமெனும் 

தமிழ்வேர்களுக்கு

பாய்ந்த நீராய்

இன்பம் பொங்கும் ஊற்றாய்...

*** ***

(படிக்கும்போதே.. உங்கள் கண்கள் விரியும் குதூகலமாய் இல்லையா... முக்கியமாக அப்பன் முருகனை கும்பிட மறவாதே. 

தை / சித்திரை மாதம் இரண்டு முறை புதுவருடம் கொண்டாடும் தமிழினம்னு கூட சொல்லாம்)
 

Sunday, 31 March 2024

மை விரலால் மாயம் செய்வாயா மனிதா..?*

 

*மை விரலால் மாயம் செய்வாயா மனிதா..?*

மூளைச் சலவை செய்ய

மூலையில் முடக்க

நாளெல்லாம் கால்கடுக்க 

கூட்டம் ஒன்று தேடுது

ஊர் கூட்டி கூவுது

பல்லைக் காட்டி இளிக்குது...


நேற்றுவரை

யாரடா..எவனடா..நீ

எந்த இனமடா.. நீ

பிச்சைகார கூட்டத்த

தொறத்துடா..

வெறுப்பை உமிழ்த்து

ஓடஓட ..விரட்டி

நாடகமாடிய

நயவஞ்சக நரிகள்

அரசியல்(வாதி)பாவிகளின்

கூட்டம் ஒன்று தேடுது

ஊர் கூட்டி கூவுது

பல்லைக் காட்டி இளிக்குது...


மாயத் தோற்றத்தால்

மயங்கி மண்டியிடாதே

வழுக்கி வீழாதே

வெள்ளை மனமுள்ள

ஏழையெளிய மனிதா..


நாயாக உழைத்தாலும்

பேயாக அலைந்தாலும் 

நாதியற்றவனென

முதுகில் முத்திரை குத்தி

என்றுமுனை ஏணிப் படியேறாது

ஏழ்மைக்குழியில் மூடவே

கைகள் வணங்குகிறது...


கொள்கைக் கொலைசெய்து

கொள்ளை யடிக்கவே

கட்சிமாறல் கூட்டணித்தாவல்

நாடகம் அரங்கேறுகிறது...


நேர்மைத் தோள்களால்

நாளும் நேர்கொள்ளும் 

உழைக்கும் இனமே

ஊளையிடும் ஓநாய்களின்

இனம் கண்டுவிடு...


நட்புறவாகி இணையும்

பண்டிகை அல்ல

உரிமையால் உன்கையால் 

பாடம்புகட்டும் தேர்தல்விழா

மறந்து விடாதே 

மானமுள்ள மனிதா...


உன் கைவிரலால்

உயிர்ப்பிச்சை போடாதே

உண்மை பேசும் 

நாக்குள்ளவனுக்கு

உன் வாக்கையிடு..

உலகம் நடுங்கும்

உன் மைவிரலால்

மாயம் செய்துவிடு...

*** *** ***

Monday, 25 March 2024

இனிய சிட்டுக்குருவி இனமே...*


 *இனிய சிட்டுக்குருவி இனமே...*

எங்கே.. சென்றாயோ

ஏங்கிய உள்ளத்தில்

இன்பத் தேன்சிட்டின்

சிணுங்கல் சீண்டியதால்

துள்ளி எழுந்தேன் 

கைகள் துளாவி

தேடிய கண்களுக்கு

பட்டதோ கும்மிருட்டு...

கனவில் கண்டேனோ..!


இலவம் பஞ்சாய்

தழுவிய பிஞ்சு

சிட்டுக் குருவியே

நலமாய் இருக்கிறாயா...


உன்பட்டு இறகைத்

தொட்டுவிட ஆசை...

காதலாய் உன்இணை

முத்தமிடும் ஓசை

கேட்க ஆசை...


முற்றத்து கூட்டில் 

லூட்டி அடிக்கும் 

உன் *கீச்கீச்* ஜதிக்கு

ஏங்குகிறது மனம்தாளமிட..


பாசமாய் பாடித்திரிந்து

பசும் வயலுக்குள் சுற்றி 

பானைக்குள் தாகம்

தீர்க்கும் எம்மினத்தை

பாந்தமாய் ரசித்தவன்..


இன்று.. பாழடித்து

மொட்டையடித்து

மாடிமேல் மாடிகட்டி 

வாழ்வாங்கு வாழும் 

மானிடனாய்.. மனம்மாறி 

ஓர்நொடியில் பொசுக்கும்

 நிலையாகிவிட்டானென

ஓடிவிட்டாயோ...

மீண்டும் வரும்வழி

மறந்துவிட்டாயோ...


அரசன் அன்று கொல்வான

தெய்வம் நின்று கொல்வான்

என்பது அக்காலம்..

ஒன்றுமறியா உன்

சிற்றினம் அழித்த பாவம்தானோ..

அடித்துக் கொள்கிறோம்

கடித்து கொள்கிறோமோ

இக்காலம்...


என் இனிய

சிட்டுக்குருவி இனமே

எமக்குள் அன்பெனும்

ஊற்று பெருக..

உன் அடிநாதக் குரலோடு

திரும்புவாயா...

***. *** ***

என் வாழ்க்கையென எழுந்து நில்...

 *என்னோட வாழ்க்கையென எழுந்து நில்..*


உள்மனம் ஆறாத

சொல்லால் சுடாதே,.

உன்மனம் மாறாத

செயலால் சுருங்காதே...


கால் கடுக்க

கடன் கேட்காதே...

காலம் கடந்து

கடமை செய்யாதே..


நற்செயல் நன்றியை

அன்றே கூறு...

தீயவை காண்கையில்

தீயாய் பொசுக்கு...


நமக்கான நாள்வரை

நாளை தள்ளாதே...

பிறக்கட்டும் 

புதிய நாளோடு

புது மனமும்...


நான்கு திக்கும் 

நன்கு கவனி

உனக்காக காத்திருக்கும்

ஏதோ ஓருயிர்...


குடும்பம் எனும் கூட்டை உடைக்காதே..

கட்டுவதும் ஒட்டுவதும் 

கடினம்...


என்னடா வாழ்க்கையென

சளிக்காதே

என்னோட வாழ்க்கையென

எழுந்து நில்...


படித்தவன் கைவிட்டால்

படைத்தவன் காப்பான்...


வியர்வைத் துளிகளால்

உன்மணம் கலக்கட்டும்

வீசும் காற்றில்...

தலை நிமிரும் ஓர்நாள்

வெற்றிக் களிப்பில்..

*** *** ***

நானறிந்த கவிதை...

 


உமிழ்நீர்.. உயிர்நீர்

 


நீராதார நிலத்தில் நிற்போமா.. நிலையாய்*


 அகழ்வாராய்வில்

ஆழ்துளை பூமியில்

கண்டெடுத்த ஆழுக்கேறிய 

நாட்குறிப்பு புதையலில்

மூதோர் கிறுக்கல்கள்..


கதிரவன் சுடுமுன்

துள்ளலாய் எழுந்தோம், தொழுதோம்..தவழ்நதோம்..

ஆற்றுநீரை 

அள்ளிப் பருகினோம்

அருவியை 

கருவாய் நினைத்தோம்

குருவிகளும் குளித்தது

கூடுகளில் குதூகலித்தது...


நீரால் இணைந்தோம்

நீரை பகிர்ந்தோம்

சேர்ந்தே..சேமித்தோம்

வந்தாரை வணங்கினோம்..

எம்காலம் மும்மாரி 

பொழிந்த பொற்காலம்...

அடுத்த தலைமுறையே

அடித்துக் கொள்ளாதே

ஆழ்கிணற்று நீரே..

உனையாளும் ஆண்டவன்

அதை நாளும் தொழுதிடு...


நாகரிகத்தில் நனைந்த

கோமாளிகள் நாம்

நீரால்.. பிரிந்து

நீரால்.. எரிந்து

நீரால்.. அடித்து

நா.. வறண்டு கெஞ்ச

துளிநீரை..தெளித்து

கண்ணீர் வடித்தே 

வாழ்கிறோம்...


வண்ணக் கலவை

அடைத்த குப்பிகளுள்

வாழ்வை அடகுவைக்க

நீராதாரம் தொலைக்கிறோம்...

 

ஆற்றுப் பெண்ணின்

மணல் கற்பப் பையகற்றி

மலடாக்குபவர்முன் மானமின்றி

மண்டியிடுகிறோம்


உயிரினம் மீள

நலமாய் வாழ

நீர் - திரவம் தேடி..

நிலாவுக்கு சென்று

நிலத்துக்குள் நுழைந்து..

ஓர்துளி கண்டவரே

மனித தெய்வமனெ

ஆரத் தழுவுவதற்குள்

விழித்திடு.. சமூகமே...


அறிவோடு அறிந்திடு

நீராதார சேமிப்பு

அருமை தெரியா

வீணர்களை வீழ்த்திடு

கண்ணீர் வற்றுமுன்

தண்ணீர் காத்திடு...


அன்று..

ஆண்டதும் மாண்டதும்

மண்ணால் பெண்ணால்

பொன்னால்...


இன்று..

வாழ்வதும் வீழ்வதும்

நீரால்... தண்ணீரால்


இனியும் நிலையாய் நிற்போமா

நீராதார நிலத்தில்..?

மறந்தே.. மனம் மரத்தே.. 

மடிவோமா நிலத்தடியில்..?

கேள்விக்கு தேடும் பதிலாய்

இதயம் துடிக்கட்டும்..

*** *** ***

புதுதில்லி

உண்பதற்கும் முன் சிந்திப்போம்

 *எதை உண்பதற்கும் முன் கவனமாக இருங்கள்...*

முரண்பாடுள்ள மனிதர்கள், செயல்கள்  கேள்விபட்டிருக்கிறோம்... ஆனால் முரண்பாடுள்ள உணவும் அதன் உடனடி விளைவும் பார்த்திருக்கிறீர்களா.

"நீண்ட நாட்களுக்கு பிறகு என் பையன் மனைவி விரும்பி சொன்னதற்காக நேற்று மதியம் தில்லி கன்னாட் பிளேசில் உள்ள சரவணபவனுக்கு மதிய உணவு உண்ண சென்றோம்.. வழக்கம்போலவே கூட்டம் அதிகம்... டோக்கன கொடுத்து அழைப்பார்கள்..

இடம் கிடைத்து உட்கார்ந்ததும் ஆர்டர் எடுக்க பேரர் கேட்கும்பொழுது..  மாற்றத்திற்காக நமது வீட்டில் அடிக்கடி செய்யாததை முயற்சி செய்வோமென சப்பாத்தி, ஆப்பம் எனக்கும், மனைவி மகன் இரண்டு ஃபுல் மீல்ஸ் அதாவது அனைத்து காய்கறி கூட்டு பொறியலுடன் சோறு குழம்பு ரசம் தயிரென இருக்கும் இரண்டு பிளேட் செய்தோம்... 

நன்றாக இருந்தது என்று சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தோம்.. 

வரும் வழியில் அரைமணி நேரம் ஆகவில்லை.. மனைவி சொன்னாள் வயிறு லேசாக வலிக்கிறதென்று... நான் சொன்னேன் நம் வீட்டில் செய்யும் உணவு வகைதானே ரெஸ்டாரன்ட் லும் சாப்பிட்டோம்.. ஏன் வலிக்குதுன்னு...

அதற்கு "எனக்கும் அதுதான் புரியலைங்க"ன்னாள் .. 

சரியாப் போயிடும் னு சொல்லி இருந்துவிட்டோம்... ஆனால் இரவு உணவை வீட்டில் உண்ண பசியெடுக்க வில்லை.. மதிய உணவின் கனம்தானென வேண்டாமென உறங்கிவிட்டோம்...

அடுத்த நாள்.. என்றும் காலைக்கடன் பிரச்சினை இல்லாத எனக்கு

 Gut health கெட்டதால் காலைக்கடன் முடிக்க சிரமமாக இருந்தது..(மலம் வரவேயில்லை) 

என்ன.. வீட்டிலும் ரெஸ்டாரன்ட்டிலும் ஒரே மாதிரியான உணவுதானே.. கொஞ்சம் வேணா மசாலா தூக்கலாக இருக்கலாம் என்றுதான் நமக்கு நினைக்கத் தோணும்.. ஆனாலும் வயதின் காரணமாக உடல்நலம் உடனே கெடத் தொடங்குகிறது.. மனைவியும் சொன்னாள் வயிறு கடித்து கடித்து தான் காலைக்கடன் முடித்தேன். பையன் 15 வயதென்பதால் பிரச்சினை ஒண்ணுமில்லை...

நான் நினைத்தேன... நம் பணத்தை செலவுசெய்து நாமே வினை வாங்கிவிட்டோம் என்று..

எல்லோருக்கும் தெரியும் காலைக்கடன் சரிவர வராமல் நீண்ட நேரம் முக்குபவர்களுக்கு தான் பைல்ஸ் பிராப்ளம் அதிகம் வருகிறது...

ஒரே வகையான உணவுதான் ஆனால் செய்யும் முறை அதை பதப்படுத்தப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட செயற்கை மசாலா கலப்பதால் (கண்டிப்பாக கலப்பதுதான் ஓட்டல் வியாபாரத்தின் எழுதப்படாத சட்டம்) எவ்வளவு விளைவுகள் ஆரோக்கியம் கெடுகிறதென புரிந்துகொள்ளவும்..


ஆகவே.. எனக்கும் புரிந்தது, ஆனால் gut health எப்படி சரியாக்குவது என்று...  எனக்கு தெரியுமென்பதால் கவலைப்படவில்லை..


நம் தமிழ்ச் சமூக சித்தர்கள் கற்றுக்கொடுத்த பாரம்பர்ய சொத்து..

*யோகாசனம்* தான் அதற்கு சிறந்த மருந்து ..


அரைமணி நேரம்.. யோகா தான் செய்தேன் .

அதாவது

பிராணயாமம்  முடிந்து மற்ற 10 யோகா 10நிமிடம், அடுத்ததாக முக்கியமான *தனுராசனம்*, *ஹலாசனம்* இரண்டும் 15நிமிடம்  செய்து முடித்தேன்.. 

வயிறு இளகியாதாக உணர்ந்தேன்..


ஓய்வேடுத்த 15 நிமிடங்களில்  காலைக்கடன் எந்த வலியும் பிரச்சினையின்றி முடிந்தது... 😃


So... we must understand the magic of Yoga.


மனதும் உடலும் இரண்டும் நன்றானதும்... சிரித்துக் கொண்டே 

சொல்லிக்கொண்டேன்.. *What a Great ancient Doctors our Tamil Sidhars were*

எதை உண்பதற்கும் முன் கவனமாக இருங்கள்..

*விரும்பும் உணவே..*

*வியாதிக்கு விருந்து வைக்கிறது*

*அதை சரிசெய்ய*

*உடலே மருந்துமாகிறது...*

*உடலை நேசிப்பவன்*

*தினம் யோகாவை யாசிப்பான்..*

***


(I know the whole matter can be narrated in little more simple.. ஆனால் என் தாய்மொழியில் மட்டுமே விளக்கமாக சொல்லமுடியும...



Sunday, 18 February 2024

நீதிபதி... இல்லை ஸ்ரீபதி என்னும் நான்..*

பல்லுயிர் கலந்த

மனித இனமே..

என் இனம் ஏன் 

இவ்வண்ணமென

எண்ணும் மனமில்லாத

பெண்ணினம் நான்

தூங்கிய நொடிகளில்

ஏங்கிய நொடிகளே அதிகம்..


செல்லுமிடம் தூரம்தான்

சென்றுவிட்டேன் 

போகும் இடமும்

இனி தூரம்தான்

போராடும் மனம்

சளைக்கவில்லை...


மடை திறந்ததும் 

நடையை அடைக்கும் 

தடைக் கற்களை

உடைத்துச் செல்லும்

காட்டாற்று வெள்ளம்..


ஒடுக்கப்பட்டது

தடுக்கப்பட்டதென

ஒதுக்கபட்ட எம்மை

அவனால் படைக்கப்பட்டதென

அணைத்த அன்பிதயங்களே

கோடி வணக்கங்கள்.. 

நல்லதோர் வீணையாய்

இன்னலை துடைத்த

இன்னிசையாகும்

உறுதியுடனே.‌.

நாற்கால் இருக்கையில் 

நானிருப்பேன்...


நளினம் கற்ற பெண்இனமே

நீ நதிபோல ஓடிக்கொண்டிரு

நாளைய வரலாறு

நம் பெயரும் சொல்லுமென 

நம்பிக்கையோடு...🙏

*** ***

(ஜவ்வாது மலையில்.. அரிய ஜவ்வாது மணமாய் வீசும் 23வயது பெண் நீதிபதிக்கு சமர்ப்பணம் இக்கவிதை..🙏)

Sunday, 4 February 2024

கேன்சர் எனும் கேங்ஸ்டர்..

 


புற்றீசலாய் வளருமோ

புயலாய் பரவுமோ

புற்றுநோயெ ன தவிக்கும் 

மனம் வேண்டாமே

மனித இனமே...


புகைப்பதும்

மதுவை சுவைப்பதும் 

அன்றோர்நாள் ஆனந்தமே...

அதனால் வருவதும்

ஆட்கொள்வதும்

ஆயுளுள்ளவரை 

அலைக்கழித்து..

உலைவைத்து

அடங்க வைக்குமே...


கற்கத் துடித்த

கவ்விப் பிடித்த

கேடுகள் யாவும்

நொடியில் நடக்கும் 

மனச் சிதறலே..


விருட்சமாகி வளர்ந்தால்

விடாது துரத்தும்

நாடிகள் நொடியும்வரை...

பிடிகள் இறுகுவதற்குள்

விழித்துக்கொள்

தூய வாழ்விழந்து 

மாய வலைக்குள்

மறைந்து விடாதே...


கேன்சர் எனும்

கேங்ஸ்டர்கள் 

சூழ்வதற்குள்

மான்ஸ்டர்களாக

மாறிவிடு மானிடா...

***** ** *****

Saturday, 27 January 2024

விதையே.. நீ உறங்குகிறாயா..?


நெல் விதையே.. 

நீ உறங்குகிறாயா..? 

முடியவில்லை

விதைத்தவன் என்னால்...


நன்றாக வளர்ப்பேனா...

செழித்து சிரிக்கும்

உன் முகத்தை பார்ப்பேனா...


பல உயிர்களின்

வயிற்றை வாடாது

காக்கத் துடிக்கும் உன்னை

வாடாமல் காப்பேனா..


வேதியியல் கழிவுகளகற்றி 

இயற்கை காற்றை

சுவாசிக்க விடுவேனா..


மனிதக் கேடுகள்

ஏற்றும் நோயண்டாது 

உனை அணைப்பேனா..


குடைந்த கேள்விகள்

நிறைந்த மனதால்

உறங்க முடியவில்லை..


கண்ணீர்த் துளிகளால்

நனைக்க மாட்டேன் 

கவலையின்றி எழுந்து வா..

நடுங்கும் உனக்கு

ஊட்டச் சத்தாயிருப்பேன்

பூமிப்பந்தின் பசுமைக்கு

உயிர் கொடுக்கும்

உன் குடுமபத்தை

கட்டிக் காக்கும்

போராளி ஆவேன்.. 


என்னுயிர் போனாலும் 

உன்னுயிரை

வளர்த்தெடுப்பேன்

இறுதிமூச்சு விடும்வரை...

*** ***

(ஓடாய் தேயும் உழவனுக்கு சமர்ப்பணம் )

Monday, 22 January 2024

ராம்.. நாமம் சொல்லும் தமிழ ராம்..(22-01-24)


 காக்கும் ஆண்டவராம்

விஷ்ணுவின் மறு

பிறவியானவராம்

தசரதன் பெற்றவராம்

அயோத்தியில்

பிறந்தவராம்...


ஓர்சொல்.. ஓர்வில் 

ஓர்இல் கொண்டவராம்

தெய்வ பிராட்டி

சீதையை மணந்தவராம்...


அதிபலசாலி அனுமன் 

அவர் பக்தராம்

ஜெய் ஸ்ரீராமென

நெஞ்சை பிளந்தவராம்

இலங்கையை எரித்தவராம்..


அநீதியை

அழித்தவராம்

நீதியை நாட்டியவராம்..


தேசத் தந்தை 

வணங்கியவராம்

உயிர் பிரியுமுன்

ஹேராமென 

துடித்தவராம்...


ராம்.. ராமென வணங்கும்

உயிர்கள் துன்பமகல

அருள்புரிந்தவராம்

அகிலத்தை காத்தவராம்...


அல்ல 108முறை

வாழும் வரை

தனை மறந்தே

ராம்.. ஜெயம்

தாய் மொழியில்

சொல்பவராம்

ஆத்திகன்..நாத்திகன்

கலந்த தமிழராம்

நாம் எல்லாம் 

கம்ப ராமாயணம்

படித்தவராம்...

தமிழ் கடவுள்(முருகன்)

தாய்மாமன் முறையாம் 

திருமாலின் அவதாரம்

ஜெய்.. ஸ்ரீ..ரா..ம்🙏

Tuesday, 16 January 2024

தை..தை..யென* *தைத் திருநாள். ஜதிகள் அதிரிட..*

 💐 *தை..தை..யென*

*தைத் திருநாள். ஜதிகள் அதிரிட..*


*தை* மகள்

தமிழச்சிகளின்

ஒய்யாரமாய் ஒதுங்கிய

ஓரக்கண்கள்

கனலாய்.. காதலாய்

ஒளிவீசி உசுப்பிட.


திரண்ட தோளோடு

துடிக்கும் விடலைகள் 

துள்ளி விளையாட..


கொழுத்த பிடறியாய்

திமிரும் எருதுகள் 

எள்ளி நகையாட..


ஆடுகளத்தில் அதிரடியாய்

அதகளம் செய்யும் 

ஜல்லிக்கட்டு..

அழியாத சுவடாய்

வீரச் சின்னமாய் 

ஆழமாய் பதிந்த

விழுப்புண் தழும்புடன்

வீரத்தமிழன் செய்த

போர் விளையாட்டின்

நுழைவுச் சீட்டு...


கறுப்புக் கரும்பு

மஞ்சள்.. கிழங்கு

அனைத்த

மண்பானை வயிற்றில்

வெள்ளை பச்சரிசி

பாசிப் பருப்புடன்

வெல்லம் அணைக்க

பாலிட்டு.. கொஞ்சி

கொதிக்க விட்டு 

*பொங்கலோ.. பொங்கலென*

குடும்பமாய்.. கூட்டமாய் 

குதூகல கூச்சலிட்டு

சூரியனை வணங்கி

மாட்டன்னையின் 

நெற்றியில்

சிவப்புத் திலகமிட்டு

வாழவைத்த

பூமியை முத்தமிட்டு

வாழ்வளிக்கும்

உழவனை உயர்வாக்கி..  

உலகெங்கும் 

உரக்கச் சொல்லும் ஓர்விழா.. 

*பொங்கல்..* எனும் 

தமிழர் திருவிழா

தைத் திருநாள்...


*தை..தை..யென*

*ஜதிகள் அதிரிட*

கொண்டாடு தமிழா..

உனதருமை பெருமை

அண்ணாந்து பார்க்கும் 

உலகம் என்றும் 

உன்னோடு.. தமிழா...🙏

***

Sunday, 31 December 2023

ஆளப்பிறந்தோமென அடியெடுத்து வைக்கட்டும்

அனைத்து உயிர்களும்..

இன்னலு டைத்து

இன்ப மணைத்து

ஆளப் பிறந்தோமென

அடியெடுத்து வைக்கட்டும்

ஆங்கில புத்தாண்டில்...


பிறந்தது

புதியஆண்டு மட்டுமா..?

எட்டத் துடிக்கும் எண்ணங்கள்

வெட்டியெறிந்த அழுக்குமனம்

ஒடடத் துடிக்கும் வெற்றிகள்

கொட்டி கொடுக்காத

கொட்ட மடிக்காத

கோடிமைல் தூரத்து

அன்பு உள்ளங்கள்

இனியோர் புரட்சிசெய்ய

புதியதாய் பிறந்தோமென

பெருமூச்சு விடட்டும்..


ஏமாற்றப் பட்டவன்

கைவிடப் பட்டவன் 

என்னால் யாருமில்லையென

உன்தலை நிமிரட்டும்...


உன்(னை) சுற்று(றிய)ச் சூழல்

உனைப்பெற்ற பூமித்தாய்

பெருமை யடையட்டும்

உன்செயலால்..

முடியுமெனும் மூச்சால்

இதயம் துடிக்கட்டும்

பிறக்கும்..ஒவ்வோர்

நாளும்.. நொடியும்...


வேண்டும் ஆங்கிலம்

ஆங்கில ஆண்டும்..

ஆனாலும் அகிலம்போற்றும் 

தமிழ்ப்பாடல் மணக்கும்

தமிழ்ப்பேர் இனிக்கும்

தரணியே  தழைக்கும்

அதுதரும் பண்பினை

மறவாதே..பரப்பிட தயங்காதே.🙏

***. *** ***

அதான் 2024 பொறந்தாச்சே.. சட்டுபட்டுனு அடுத்த வேலைய பாருங்க.. தயாராகுங்க.. நமக்காக தமிழன்னை காத்திருக்கிறாள்.. பொங்கல் சோறு சாப்பிட..😀)

Saturday, 30 December 2023

2024-ஆங்கில புத்தாண்டே.. வருக.வருக..

31-12-2023  இன்று
வாரத்தின்.. மாதத்தின்
வருடத்தின் இறுதிநாள்
விடுமுறை நாளென
சிறப்புடன்..சிரிப்புடன்
விடை பெற்று 
2024ற்கு வழிவிடுகிறது...

ஆங்கில புத்தாண்டை
ஆங்கில மோகத்தில்
ஆங்கிலவழியில்
கொண்டாட
மனம்சிதறி.. மலையேறி
சீரழியும் சிறைக்குள்
சிக்கிவிடாதே...
சிறுமைகள் துளிர்த்து
பெருமைகள் துளைத்து
பேரிழப்பை பரிசாக்கும்
எழுதப்படாத சட்டத்தை
எட்டிஉதைத்து எறிந்துவிடு...

காலத்தே 
பயிர் செய்தால்
நற்காலமே..
காலாவதியாக்கும்
மதுவால் 
அலங்கோலமே...

தவறுகள் திருந்திய
திருமகனாய்..
புது உணர்வால்
புது எண்ணங்களால்
புது மனிதனாய்
புதுமைபல செய்திட
பறப்படு தோழா...

வாழ்க்கை ஓர்
நெடும் பயணம்
பணத்தால்..பாசத்தால்
உறவால்.. பிரிவால்
இழந்தது எதுவும் 
நிரந்தரமில்லை..
மறுவுருவமாய்..மானசீகமாய்
உனைக்காண திரும்புமென
உறுதிக்கொள்...

அவன்.. அதை
இவன்.. இதை
எவன்.. எதை
சொன்னாலும்
செய்தாலும்..
என்மனம் சொல்வதை
செய்தேனென
உரக்கச்சொல்
உறுதியாய் நில்..
எதைச் செய்தாலும் 
இப்ப இல்லைன்னா
எப்பவும் இல்லையெனும்
எண்ணத்தில் செல்...

நீ பேசும்
நற்சொல்
நற்செயல்
நற்பவியாகட்டும்...

வாழும் வரை
நீ வீழும் வரை
வணங்கும் 
வாழையாய் மாறு.. 🙏

Friday, 29 December 2023

தமிழினத்தோலில் மின்னிய பொன்மனச் செம்மல்...

 



கறுப்பு வெள்ளை 

கனவுகளை

வண்ணங்களால்

அலங்கரித்து

ஆராதனை செய்தவர்...


சிவப்புத் தோல்கள்

மின்னிய விளக்குகளில்

கறுப்புத் தோலை

மின்ன வைத்தவர்

பொறுப்புள்ள அண்ணனாய்

தம்பிகளின் முன்

பொன்னாய் ஜொலித்தவர்...


ஓசியாய் ஏமாற்றி

பாசாங்கு செய்தவர்முன்

பசி என்பதையழித்து

பாசத்திற்கு மறுபெயரானவர்...


நிழல் உலகில்

வேடம்தரித்த இவர்

நிஜ உலகில் 

கபடதாரிகளை  உரித்தவர்...


சொல்லால்.. செயலால்

பொன்மனச் செம்மலின் 

உருவத்தில் வாழ்ந்த

கறுப்பு வைரம்...


அகிம்சை அழித்து

தேசப்பற்றை நெஞ்சிலேற்றி

கண்ணகளால் தீப்பொறி

பறக்க வைத்தவர்

நீதிக்குத் தண்டனையெனும்

அநீதியை அறுத்தெழ 

ஒன்றுசேர் தோழாயென..

கனல் வார்த்தைகளால்

இளம் தலைமுறையை

கட்டி இழுத்தவர்

தன்மானத் தமிழனை

தட்டி எழுப்பியவர்...


ஆண்டாள் பெற்ற

இம் மைந்தன்

அன்புள்ளத்தால்

ஆண்டவன்..

எனும் பேறுடனே மறைந்து

மக்கள் மனதில் நிலைத்துவிட்டான்

என்றென்றும்...🙏

Sunday, 24 December 2023

பா...வுக்கே இலக்கணமான சுபா...



 பா க்களால் 

பாரதப் பிள்ளைகளை

தாலாட்டியவர்

பரங்கியரை அதிரவைத்தவர்...


எழுத்தாணியால்

செதுக்கிய எழுத்துக்களால்..

ஏனென்ற கேள்விகளால்..

ஏவுகணை செய்தவர்...


ஆறாத சினத்தால்

தீயவரை துளைத்துவிடு தோழாயென

புதுமைப் பெண்களின்

மனதில் விதையானவர்..


படைத்தவனை

ஆராதிக்கும இனத்தில் உதித்தாலும் 

ஆகாதென தள்ளிவைத்தவனை

அணைத்து முண்டாசுகட்டி

மீசை முறுக்கியவர்...


பாரெங்கும் பரதேசியாய்

பழ மொழியை நுகரந்தபின்

தாய்மண் தமிழ்மொழியை

நாடி நரம்புகளில்

சுவாசித்தவர்...


உலகம் வியந்த

மொழி பிறந்த

எம் மண்ணிற்கும்

எம் பாட்டுக்கும் 

தானே தந்தையென

தேசத் தந்தைமுன்

தலைக்கனம் காட்டியவர்...


காக்கை குருவிகளும்

நம் இனமே

காணி நிலமானாலும் 

அதற்கும் பங்குண்டென

தலையில் தட்டியவர்...


செல்வம்பின் செல்லாது

செல்வந்தர்பின் நில்லாது

செல்லம்மா.. செல்லம்மாயென

சொல்லிக்கொண்டே 

இருந்துவிட்டார் இறக்கும்வரை...


இந்திய மண்ணில்

இவனைப்போல்

இனியொருவன்

இனிமேல் இல்லையென

எண்ணியவர்..ஏசியவர்..

அழுதவர்.. ஆகாதவர்

அனைவர் மனதிலும்

சிம்மாசனமிட்டு

இறக்கும்வரை 

இருந்துவிட்டார்..


யார்.. யாரென

யாரும் கேட்காமல்

யாவரும் நலமடையவே

பா.... வுக்கே இலக்கணமான

பா.. என்னும் சுபா...🙏

* *


இன்று பாரதியார் பிறந்தநாளில் அவரைத் தொழவேண்டும்...  இல்லையெனில் தமிழனாய் அவரை நினைத்து பெருமைகொள்வோம்.. தமிழினமே...🙏

வாட் நெக்ஸ்ட்டென வாட்சப்கால் பேசும் மும்மூர்த்திகள்

 வாய்க்கா..வரப்பு

சண்டை போடாமல்

சிண்டு முடிக்காமல்

துண்டு போட்டு

செந்தமிழ்.. கொடுந்தமிழ்

செல்(Cell)தமிழால்

தொண்டாற்றிய

வாண்டுகளை

நோண்டி நொங்காமல்

தோண்டி துருவாமல்

மண்டை உடையாது

மண்டி யிடாது..

அண்ட வைத்து

அண்டாகுண்டா ஏதுமின்றி 

அலைக் களித்து 

கண்டு.. கேட்டு களைப்பாக்கி

பண்டிதனாக்கி

அண்ட மடக்கிய பிண்டமாய் ...


நமக்குள் தூங்கிய

நவ ரசங்களை

தட்டி எழுப்பி..

அறு சுவையை

பார்வையால் ஊட்டி..


உலகை மயிலால் 

சுற்றிய முருகனாகாது

உள்ளங்கையால் சுற்றி

கணபதியாக்கி

பானைவயிறு வீங்க

எந்நேரம் காதலாய்

பணிவாய்.. பவ்யமாய்..

தலைகவிழச் செய்து...


செய்தியா.. சேவையா

குப்பையா.. கும்பிடுவதா

சீர்தூக்கி பாராது

பணமில்லாது..

பிச்சையெடுக்காது

எம்மொழியும் சம்மதமென...


முப்பால் சுவையால்

முப் பாலினமும்

ஒன்றுகூடி.. படிக்க 

வேற்றுமை யில்லா

ஒருமைப்பாடு பழக...


உப்பு சப்பில்லாத

கதையா.. கவிதையா

இலக்கணப் பிழையா

இங்ஙனம் காணாது..

தினம் தினம் தவறாது.. 

குனிய வைத்து

குட்டிக் கரணமின்றி

ஏங்க வைத்து..

சிரிக்க வைத்து

சிந்திக்க வைத்து...


உலகமே இருண்டாலும்

நீயின்றி.. இவ்வுயிர் 

வாழாதென போதையேற்றி

மயங்க வைத்து

உறவுகளை தள்ளி

உடலையொட்டி உரசும்

அலைபேசி அங்கமே..

கடலளவு பூமியை

கடுகாய் சுருக்கும் 

கையளவு உலகமே

அதில் என்றும் மின்னும்

வாட்சப்குரூப் தங்கமே...

உனக்கு கோடி வந்தனம்...


வழக்கம் போலவே

குறைவின்றி  வளரும்

உன்சேவை ஒன்றே

பிறக்கும் இப்புத்தாண்டிலும்

வாழ்க பல்லாண்டு..


இந்த மனித இனம்வாழ

ஐம்பூதங்கள் போதுமென

நினைத்த இறைவன்கூட

ஆறாவதாய் உனை

படைத்தவனை

பிரமிப்பாக பார்க்கிறான்..

கூட்டமில்லா கோயிலுக்குள்

தனியாகும் நிலைதானோ..!

வாட் டு டூ..  வாட் நெக்ஸ்ட்டென

முப்பெரும் தேவர்கள்

வாட்சப்கால் பேசுகின்றனர்...😁

* * *

Thursday, 21 December 2023

*தத்தை மொழியால்.. வித்தை செய்தவள்..*

🪷🌹🎂முழுமதி.. முகமால்

மீன் விழியால்

தத்தை மொழியால்

வித்தை செய்தவளே...


நித்தம்.. நித்தம் 

என்சித்தம் சிதற

சிரம் தாழ்ந்து

கரம் கோர்த்தவளே..

வாழ்வெனும் வசந்தத்தில்  

ஓர்தவப் புதல்வனை 

பரிசாய் தந்தவளே...


உள்ளம் உவந்து

விருந்தோம்பல் புரிவதே

கடமை யெனும்

பெற்றவரை பெற்றவளே..

அன்பு.. அழகு 

ஆளுமை.. கருணை

பொருள் பொதிந்த

*அனிதா*எனும் பெயர் கொண்டவளே..


உன்சொல்லால் செயலால்

உனைநாடும் மனிதர்

துடுப்புகண்ட ஓடம்போல்

ஒடிந்த மனமாறி 

துடிந்த நிலையேறி

நலமாகி.. வளம்காண

வாழ்த்துகிறேன்..

22-12-2023.. இன்று

பிறந்தநாள் காணும்நீ

ஆண்டவன் அருளால்

நீடூழிவாழ வாழ்த்துகிறேன்...💐

*** *** ***

*வீ. சீனிவாசன்*

(உன்இணை சேர்ந்து வாகை சூடும் கணவன் )

Sunday, 26 November 2023

சிந்தனைக் கேணி..



பார் போற்றும் 

பகுத்தறிவு ஞானி

பாவங்களின் சிரமகற்றிய

சிந்தனைக் கேணி

அறிவினம் காத்த அச்சாணி...


பெண்ணடிமை

மடமை களுடைத்து

இனப்பிரிவு இழிவால்

பாதகப் பழியால்

பள்ளத்தில் விழுந்த

உள்ளத்தை உரமாக்கி

வெற்றி வேர்வையால்

சுதந்திர சுவாசமளித்த

வெண்தாடி வேந்தன்...


மூச்சுள்ளவரை பேச்சால் 

வசை பாடியவன்

போர்க்குண மனதை

பட்டைத் தீட்டியவன்

பழமை வாதிளை 

முரட்டிப் புரட்டிய

ஈரோட்டுக் கிழவன்..


மதமெனும் மனம் கவ்வாத

இம்மண்ணின் கவசம் யார் 

ஏற்றத் தாழ்வை ஏறிமிதித்த

கலியுகக் காவலன் யார்

எவராயினும் எதுவாயினும்

பகுத்தாய்ந்து பல்லுயிர் ஓம்பிய

அறிவுச் சமூகத்தின்

ஆற்றல் யாரென

தரணி வியந்த பதிலாய் 

உய்த்தவன் உரிமையுள்ளவன்

தமிழினம் மறவா

தந்தை பெரியார்...


கடவுளில்லை யெனும் 

போதனை எமக்கில்லை

என் தாய்மொழியை செதுக்கியவன் இவனென

மாடசாமி.. மயில்சாமிகளும்

வணங்கிய *ஈவெராமசாமி*

வாழ்த்துவோம் இந்நாளில்

ஒற்றுமையாய் ...🙏

*** *** **

Friday, 24 November 2023

தூர்வார.. போர் தொடுங்கள்..


மலரினும் மென்மை
மெல்லினத் தேவதைகள்
வல்லூறுகளின்
வல்லுறவுகளால்
சிதறும் காகிதங்களாய்
மாறும் அவலங்கள்
வேரறுக்க... தூர்வார 
போர் தொடுக்க
கை கோருங்கள்..

கடவுளாய் சுமக்கும் 
தங்கத் தேர்களின்
களங்கச் சக்கரங்களை 
கழற்றி எரியுங்கள் 
அன்பான ஆணினமே...

இரண்டு கைகள்
இணைந்த உறுதி
எழுப்பும் ஓசையே
இவ்வுலகம் உந்தும் 
விசையாகும்...

புன்னகைப் பூக்களால்
இன்பமி ரட்டிப்பாக
துன்பத்தை துவைக்கவே
ஓடுகிறோம் நாங்கள் 
அழகு நதிகளாய்...

ஆர்ப்பரிக்கும்
கடல் சுனாமியாக..
பேய்.. பிசாசுகளாக
பூலோக காளியாக..
மாறும் நிலைக்கு 
தள்ளி விடாதே 
அதிகார  வர்க்கமே
இருகரம் கூப்பி
வணங்குகிறோம்
நாங்கள்...
* * *

அனைத்துலக
பெண்களுக்கான வன்முறை ஒழிப்பு நாள்.. இன்று

இதுபோன்ற நாள் இனி தேவையில்லையென ஆதரவுக்கரம் நீட்டி.. சிந்தித்து செயல்படுவோம்


Saturday, 18 November 2023

ஆ......ண்(டவன்) கள் தினம்

 


அவன் இவனென
அன்புடன்
ஆதிக்காலம் முதல்
ஆயுட்காலம் வரை
அனைவரும்
உச்சரிக்குமோர் மந்திரம்
ஆண் எனும்
கனவுலக தந்திரன்
ஆம்...‌ இவன்
ஆழ்மனமுள்ள எந்திரன்...

ஆ.............ண் 
நெடில் என்பதால்தான்
அவன் நெஞ்சுரம்
நிறைந்தவன் ஆகிறானோ...!

உள்ளக் குமுறலை
ஊர் அறியாமல்
உள்ளுக்குள் அழுகிறானோ..!

ஆண்(பால்) தரும் மயக்கம்
பல போதைக்கும் 
அடிமையாகிறானோ.!

பெருமையாக
எல்லோர் சுமையும்
முரண்பாடுள்ள
பெயர்களையும்
சுகமாக சுமக்கிறான்..

பல நேரம்
பெற்றதுக்கும்
பெற்றவருக்கும்
தாயாகிறான்...

மெழுகுச் சிலையாய்
ஒளிரும் பெண்ணுக்குள்
எரியும் திரியாகிறான்...

முடியும் வரை
முடியாது எனும்
வார்த்தையை
முறியடிக்கவே
முடிவு காலம்வரை
போராடுகிறான்...

படைப்பாற்றல்
உள்ளதால்தான்
முதல் ஈரெழுத்தை 
சேர்த்துக் கொண்டானோ..?
நமை படைத்த
ஆண்........டவன்..


Sunday, 15 October 2023

3 எழுத்தில் மூச்சுண்டு.. மும்மத கடவுளுமுண்டு..

 

எம்மதத்தில்

எவ்வினத்தில் பிறந்தாய் 

என்பதல்ல  பெருமை

எத்தனை காலம் 

எத்தனை பேர் 

மனதில் வாழ்ந்தாய்

என்பதே பெருமை...


மூன்றெழுத்தில்

மூச்சுண்டு

மும்மத கடவுளுமுண்டு

மனிதமுண்டு மாண்புமுண்டு..


பிறர்நலமே தன்னலமென 

வாழ்ந்த மனிதன் 

இம்மண்ணில் இன்னும் 

இருந்திருக்கலாம்

நனவான கனவுகள்

செழித்தபின் 

மறைந்திருக்கலாம் 

என்று நினைக்கலாம்

எனில்..

மாணவ மனங்களில்

எக்காலமும் மணக்கும் 

அப்துல் கலாம்

பெயரொன்றே உச்சரிக்கலாம்...


"நமக்கும் ஓர்பக்கம்

வரலாற்றில் இருக்கட்டும்

வனம்வளர  இனம் வளரும்

சிறுவுயிரும் உறவாகுமென"

அவர் பதிவை

பசுமரத் தாணியாய்

மனதின் கனவுகள்

மண்ணின் விதைகளாகட்டும்..

* *

அவுல்பகிர் ஜைனுல்லாப்தின் அப்துல் கலாம்

APJ Abdul Kalam.

Missile Man of India

பிறந்த நாள் இன்று அவரை நினைவுகூர்வோம்.

.🙏

Sunday, 1 October 2023

ஆயுளுள்ளவரை ஆட்டுவித்தவன்...

 



வெள்ளையனை எதிர்த்த வீராதிவீரன்..

வீரபாண்டிய கட்டபொம்மன்


ஆதிதேவன் அவதாரம்

பரமசிவன் ..

ஆன்மீகம் பழுத்த அப்பர்

சுதந்திர போராட்டத்

தியாகி வ.உ.சி 

பாட்டுத் தலைவன் பாரதியென 

மண்ணின் வரலாற்றை

இனத்தின் பண்பாட்டை 

கண்டிராத இளைய தலைமுறைக்கு

காண்பித்து.. கற்பித்தவன்...


அண்ணனா... நண்பனா

கண்ணனா.. கணவனா..

ஏமாளியா.. கோமாளியா..

கள்வனா.. காதலனா..

இருப்பதும் ஓர்நிலையே 

அதுபோல் வாழ்வதும் ஓர்கலையேயென

உறவுகளின் உன்னதத்தை

உணர்த்தியவன்

நான் அசைந்தால அசையும்

அகிலமிங்கேயென 

அனைவரையும்

ஆயுளுள்ளவரை  ஆட்டுவித்தவன்...


கொழுத்த செல்வந்தன்

பரம சாது ஏழை

ஊனமுற்ற ஊமையென

குரலால்.. பாவனையால் 

நடிப்பின் நூலகமானவன்

அவன் வாயுச்சரித்த வசனவரிகள் 

தமிழினம் மறவா முகவரி...


நம்முள்ளம் கவர்ந்த

உலகம் வியந்த

சூரக்கோட்டை தந்த தமிழன்

சிவாஜி கணேசன் என்னும்

சிம்மக் குரலோன்...

பேரைச் சொன்னாலே

ச்சும்மா... அதிரும்

அகில உலகமும்..🙏

 * * 

முதியோரெனும் ஆணிவேர்

 




ஆணிவேர் ஆழமானதால்

ஆலமரம்கூட

ஆண்டாண்டு காலம்

அழியாது நிற்கிறது

மனித இனம் தாங்குவது

மூதோர் எனும் வேர்களே...

 

அவ்வப்போது

ஆசிரியரைக் கண்டால்..

நமை அறியாமல்

பாதம் பணிவோம்


ஏனோ..  மனம் 

ஏற்றிவைத்த ஏணியை

நமை ஈன்றவர்

நம் முதியோரை

வணங்க வருவதில்லை..


எல்லா வாய்களும் ஓர்நாள்

பொக்கை வாய்களாகும் 

அதில்வரும் சிரிப்பும் அழகே..

அவ்வழகை தரும் ஆனந்தம்

நாமும் தரமறவோம்..🙏

* * *

தங்கம். வீகோசீ

புதுதில்லி


சி.கு: என்றாவது தாய்தந்தை அல்லது தாத்தா பாட்டியின் அருகே அமர்ந்து கைவிரல் அல்லது கால்விரலின் அழுக்ககற்றி நகம் வெட்டி இருக்கிறீர்களா..

நான் செய்திருக்கிறேன் 

என் பாட்டிக்கு. . தவறாக சிறிது இரத்தம் வந்த வலியின் வேதனைகூட தெறியாமல் அவ்வளவு ஆனந்தமாக சிரித்தது😀

Friday, 15 September 2023

அண்ணா வைப்போல் ஆகுமா உன்நா


பேச்சும் மூச்சும்

மனிதனின் பிரதானம்

அண்ணாவின் இவை

அனைத்தும்

தமிழனுக்கே தானம்.


பேச்சும் மூச்சும் கீதம்

அண்ணாவின் இந்நாதம்

ஆர்ப்பரித்த நம்

இனமடக்கிய தாகம்..


சிலநேரப் பேச்சுக்களே

பலநேர வரலாற்றுக்கள்

பேச்சுக்கலை- அது

பறிக்ணும் களை

வளர்க்கணும்

பலர் மூச்சுகளை...


கடமை கண்ணியம்

கட்டுப்பாடு மூன்றும்

மூன்றெழுத்து முத்தாய் 

தமிழின வித்தாய்

*அண்ணா* உதித்த

மனிதன் சொத்தாய்

காதுகளில் ஒலித்துக்

கொண்டிருக்கிறதென

மறவோம் இன்று...


ஆகச் சிறந்த

பேச்சாளர் அண்ணா -அவரால்

எவரும் பெற்றிலர் இன்னா

முயன்றால் அவன் போலாகும் 

எந்நாளும் உன் நா..💐💐

*** *** **

Sunday, 10 September 2023

போர்த் தொழில் தேவையா..மானிடா

 


எதிர்பாராமல்

எதிர்வினையால்

எதிர்கொள்ளும்

ஏச்சுக்கள் பேச்சுக்கள்

ஏராளம் இவ்வுலகில்...


ஆரவாரமில்லா

அதிசயங்கள் 

ஆச்சர்யங்கள்

அதிர்ச்சிகள் நிகழ்வுகள்

குழப்புகிறது மனதில்..


ஆடல் பாடல்கள்

கேளிக்கைகள்

ஆட்கொள்வதும்

கலவரங்களால்

ஒடுங்குவதும்

ஒடுக்குவதும்

வாடிக்கை இங்கே..


நிமிடங்கள் யாவும்

நிரந்திரமின்றி ஓடுகிறது

முதுமை இளமையை முந்துகிறது

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் மணப்பதால்

பலியாடுகள் விழுந்த

பேராசைகுளம் நிரம்புகிறது..


நீ.. நானென ஒதுங்காமல்

நாமென இணைந்து

தோற்பதும் ஜெயிப்பதுமே

போராட்டம்

நன்மை நூறாயினும்

ஓர்தீமையால் ஒதுக்கிவிடும்

இம்மனித இனம்...


காய் நகர்த்தாமல்

காயப் படுத்தாமல்

கவசம் இடாமல்

நேர்கொண்ட பார்வையால்

கலங்காதுநில் மானிடா...


எது தேவையோ

அதுவே தர்மமாயின்

செய் தொழிலோடு 

போர்த் தொழிலும்

பழகுவாய் மானிடா...

*. * *

கள்ளம் கபடமில்லா கதைகளால் வாழைப்பழத்தில் நுழைத்த ஊசிபோல் நம்மை நெறிபடுத்தி வளர்த்த தாத்தா பாட்டியின் ஆசீர்வாதம் பெற்று அவரை வணங்குவோம் இன்று...

* * *

Tuesday, 5 September 2023

இருளைப் போக்கும் அருளாளர்களை வணங்குவோம்

                                           


 மூச்சை வளர்த்தது கருவறை

பேச்சை வளர்த்தது வகுப்பறை..

நேயம் வளர்த்தது திருமுறை

நற்பண்பை வளர்த்தது படிப்பறை,.

உயிர்காப்பவன் ஈசன்

உயர்வாக்குபவன் ஆசான்...


ஊதாரி உள்ளமும்

மதியா திமிரும்

உள்ளேன் ஐயா..யென

மண்டியிட்ட ஆடாகும்

ஆசானைக் கண்டால்..

நீரின்றி அமையாது

உலகெனின்

நீயின்றியும் அமையாது நல்வுலகு... 


கருவறை கடவுளை வணங்கினால்

மனம் பண்படும்

வகுப்பறை ஆசிரியரை வணங்கினால்

வாழ்வு வளம்பெரும்


கற்காலமோ

கணிணி காலமோ

எக்காலமும்

இருளைப் போக்கும்

அருளாளர் ஆசிரியர்கள்..


மாணவர்களே..

உறங்கும் உன்மதியை 

உணர்வால் மிதித்து

செயலால் செதுக்கி

மானமுள்ள மனிதனாய்

மாண்புமிகு தலைவராய்

முகவரி கொடுப்பவர்

ஆசிரிய ரெனும்

மாணிக்கங்களே..

அரண்மனை காக்கும்

மதில் போல்

ஆசிரியரைக் காக்கும்

காவலனாவோம்...


ஓர்பிறவி தந்த

பெற்றோரைப்போல்

மறுபிறவி தரும்

ஆசிரியர்களின்

பாதம் பணிய 

மறவோம் என்றும்...

* * *

அனைவருக்கும் இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.💐

Saturday, 2 September 2023

எதையும் எனதாக்கும் எவனும்

 



வறண்ட தோல்

வாடிய முகம்

ஒட்டிய வயிறு

ஒடிசல் தேகம்

உலர்ந்த வாய்

உடைந்த மனம்

 

மண்ணை தொட்டு

வாழும் உழவன்

நிலையும் இதுவே..


மண்ணில் வீழாது

விண்ணிலேறி

வாகை சூட 

வழியேற்றும் தந்தை

நிலையும் இதுவே..


எல்லாம் பெற்று

எகத்தாளமாய் வாழ்பவனும்

ஏய்த்து வாழ்பவனும்

ஒற்றை நாடியில்

கடைக்கோடி நிற்கும் 

நிலையும் இதுவே..


எதையும் எனதாக்கும் 

எவனும் ஒன்றுமில்லா

நிலையும் இதுவே..


ஆதலால்..

ஆடி அடங்கும்வரை

அடக்கமாய் வாழ்வீர்..

கர்மவினைகளுள் சுழன்று

இன்னுயிர் உழன்று

கரைவதற்குள்

நேசக்கரம் ஊன்றிய

விதைகளாய்

மண்ணிற்குள் உரமாவோம்

நம்பேர் மணம் 

வீசும் மரமாவோம்...

* * *

Sunday, 27 August 2023

அன்னை தெரசா என்னும் அன்பு தெய்வம்...

 

அன்பு என்னும்

மூன்றெழுத்தே

உயிர்களை உயர்வாக்கும் 

மந்திரமென உலகிற்கு

உரக்கச் சொன்னவள்


அயல் தேசத்து

கன்னியிவள்

நம்தேசத்தில்

கன்னியாஸ்திரியாக

வாழ்ந்தவள்..


பாரத தேசத்தின்

நோயாளிகள்

அனாதைகளென

ஒதுங்கியவர்களை

ஆதரவுக்கரம் நீட்டி

அரவணைக்க

மீட்டெடுக்க

தம் வாழ்வை

அர்ப்பணித்தவள்

நம் மண்ணிற்குள்

உரமானவள்..


அன்பு உள்ளத்தால்

அன்னையென

வணங்கப்பட்டவள்

உலகெலாம் 

உயரிய பலவிருதால்

அலங்கரிக்கப்பட்டவள்..

இன்று இவள்

பிறந்த நாளில்

பெண்ணினத்தை

மதிக்கும் 

சமஉரிமை நாளும் 

கொண்டாடும் 

பெருமை கொள்கிறது

இவ்வுலகெங்கும்...


நாமும் அவளை

நம்மின.. மகானாய்

நினைவில் வைத்து

அவள் வாழ்வின்

படிப்பினை எடுத்து

அன்புக்கரம் கோர்த்து

மதம் மறந்து

வணங்குவோம்

மதர் தெரேசாவை...🙏

* *

Saturday, 19 August 2023

அப்பாடி.. ஆடி ..

வாய் பிளந்தால் ஆத்தாடி...

காற்றில் பறந்தால் காத்தாடி...

கூழ் ஊற்றினால் அம்மன்ஆடி

அவளை வணங்கும்

பாடல்தேடி ஆடிப்பாடி

கூடி ஆடினால் கூத்தாடி..


தள்ளுபடியில் மனம் அள்ள

வைத்தது ஓடியோடி...

புதுமணத் தம்பதியை

தள்ளிவைக்கும் தலையாடி ...

எம்மாடி.. இதெல்லாம் ஏனிப்படியென

காணும் நம் முகம்வாடி

சுத்த வைக்குது தலையாடி...


அனைத்தும் இனிதே முடிந்தது 

இம்மாதம் ஆடி...🪷🪷

*** *** 

உலக மனிதநேய தினம்


நேயம் இல்லாத

மனிதம் உண்டா..?


மனிதா..

எது இல்லையோ

எது தேவையோ

அதைத்..தா  

அல்லது

தருவித்து தா...


அளவில்லாத செல்வம்

அளந்து தராவிடினும்

அன்பெனும் ஆடையை

நேசக் கரங்களால் தை..

கூடிவாழும் முறை 

உண்டென்பதை

மனதில் விதை...


நீ 

மனிதனா..மாமனிதனா

மன்னனா..மாமன்னனா..?

உன் விழி மூடுகையில்

வழியைக் காணாத

வலியால் துடிக்கும்

விழிகளே சொல்லட்டும்..


இவரைப்போல

மண்ணாசை 

மனயாசையில்லா

மனிதநேயன்

மீண்டும் பிறக்கட்டும்...


கண்ணனோ.. கள்வனோ 

அல்ல கேள்வி

கருணை யுள்ளவனா

எனக் கேள்..

உனதருகே வாழும்

உயிர்களுக்கும்

மண்ணுக்கும்

எதைத் தருகிறாய்

என்பதைக் கேள்...


இன்று மனிதநேயம்

கொண்டாடும் நாள்

அதற்கு தகுதியுள்ளவனா 

உனக்குள் கேள்...

*** ***

Tuesday, 15 August 2023

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் (Happy Independence Day)

 

மாநிலம் பல

ஒன்றடங்கியது 

எங்கள் தேசம் 

இனங்கள் பல

ஒன்றிணைந்தது

எங்கள் நேசம்

இன்னலும் வலியும்

மரணம் கடந்தே பெற்ற

இச்சுதந்திர சுவாசம்

தந்த தியாகிகளே

நமது தலைக்கவசம்...


இன்றெமது கைகளில்

தவழ்வது ஓர்கொடி

தாயின் மணிக்கொடி

என்னும் தேசியக்கொடி...


எம் மதமாயினும் 

எம் மொழியாயினும்

இந்திய னென்னும்

பெயரே பெருமை..

நம் பேச்சும்..மூச்சும்..

சொல்லட்டும் அதனருமை

அதுவே யிருக்கட்டும்

தலையாய உரிமை

முடியும்வரை 

நாட்டைக் காப்பதும்

கடமையென

உயிரான தாய்மொழியில்

உள்ளத்திலெடுப்போம் உறுமொழி...


ஊருமுறவும் துறந்து

எங்கோர்.. மூலையில் 

எதையும் ஏங்காமல்

தாய்நாடே தன்னுயிராய்

காக்கும் காவலனை

வாழும் தியாகியை

வணங்குவோம்

குல தெய்வமாய்

தவிக்கும் அவனுறவை

நினைப்போம் நமதாய்..🙏

* * **

Wednesday, 9 August 2023

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...(09-08-23- BD of My Son)


பிறந்தநாள் வாழ்த்துக்கள்...(09-08-23- BD of My Son)

குன்று தோறும் நின்றாடி

குலம் காத்த ஆறுமுகக்குமரா..

உன்றன்  அருளாசியோடு

இன்றுதித்த என்றன் குமரனை...

 

திருக்குறள் திருப்புகழ் திருமுறை

தேவாரம் திருவாசகம் தேன்தமிழ்

நூல்யாவும் என்றும் மறவாது ஓதி...

கற்றவர் போற்றிட மற்றவர் கற்றிட

செல்லுமிடம் யாவும்

நின்று முயன்று வென்றிட..

 

தமிழனாய் பிறப்பதற்கோர்

தவமிருத்தல் வேண்டுமென

இறைவன் பாதம்பணிந்து

வேர்மறவா தளிராய்.. தாய்மொழி போல்

சிறப்புற்று வாழ்ந்திட

காத்தருள்வாயென வேண்டுகிறோம்...

 

எந்நாளும் போலவே... இந்நாளும் இல்லையென

நமக்கடுத்த தலைமுறை.. தழைத்து விட்டதென

சற்றே.. ஆனந்தமாகிறது தாய்தந்தை மனமின்று,..