Monday, 25 March 2024

நீராதார நிலத்தில் நிற்போமா.. நிலையாய்*


 அகழ்வாராய்வில்

ஆழ்துளை பூமியில்

கண்டெடுத்த ஆழுக்கேறிய 

நாட்குறிப்பு புதையலில்

மூதோர் கிறுக்கல்கள்..


கதிரவன் சுடுமுன்

துள்ளலாய் எழுந்தோம், தொழுதோம்..தவழ்நதோம்..

ஆற்றுநீரை 

அள்ளிப் பருகினோம்

அருவியை 

கருவாய் நினைத்தோம்

குருவிகளும் குளித்தது

கூடுகளில் குதூகலித்தது...


நீரால் இணைந்தோம்

நீரை பகிர்ந்தோம்

சேர்ந்தே..சேமித்தோம்

வந்தாரை வணங்கினோம்..

எம்காலம் மும்மாரி 

பொழிந்த பொற்காலம்...

அடுத்த தலைமுறையே

அடித்துக் கொள்ளாதே

ஆழ்கிணற்று நீரே..

உனையாளும் ஆண்டவன்

அதை நாளும் தொழுதிடு...


நாகரிகத்தில் நனைந்த

கோமாளிகள் நாம்

நீரால்.. பிரிந்து

நீரால்.. எரிந்து

நீரால்.. அடித்து

நா.. வறண்டு கெஞ்ச

துளிநீரை..தெளித்து

கண்ணீர் வடித்தே 

வாழ்கிறோம்...


வண்ணக் கலவை

அடைத்த குப்பிகளுள்

வாழ்வை அடகுவைக்க

நீராதாரம் தொலைக்கிறோம்...

 

ஆற்றுப் பெண்ணின்

மணல் கற்பப் பையகற்றி

மலடாக்குபவர்முன் மானமின்றி

மண்டியிடுகிறோம்


உயிரினம் மீள

நலமாய் வாழ

நீர் - திரவம் தேடி..

நிலாவுக்கு சென்று

நிலத்துக்குள் நுழைந்து..

ஓர்துளி கண்டவரே

மனித தெய்வமனெ

ஆரத் தழுவுவதற்குள்

விழித்திடு.. சமூகமே...


அறிவோடு அறிந்திடு

நீராதார சேமிப்பு

அருமை தெரியா

வீணர்களை வீழ்த்திடு

கண்ணீர் வற்றுமுன்

தண்ணீர் காத்திடு...


அன்று..

ஆண்டதும் மாண்டதும்

மண்ணால் பெண்ணால்

பொன்னால்...


இன்று..

வாழ்வதும் வீழ்வதும்

நீரால்... தண்ணீரால்


இனியும் நிலையாய் நிற்போமா

நீராதார நிலத்தில்..?

மறந்தே.. மனம் மரத்தே.. 

மடிவோமா நிலத்தடியில்..?

கேள்விக்கு தேடும் பதிலாய்

இதயம் துடிக்கட்டும்..

*** *** ***

புதுதில்லி

No comments:

Post a Comment